|
பயணம் - 1
|
நான் புலம்பெயர்ந்து பலவருடங்கள் ஆனபோதும் பலரைப்போலவே தாயகத்துக்கு செல்லவேண்டும் என மனம் உந்தினாலும் அந்தப்பணத்தை மிச்சம்பிடித்தால் வீட்டுக்கு அனுப்பலாம் என எண்ணி எண்ணியே வருடங்கள் 07 ஆகி விட்டபடியால் இம்முறை எப்படியேனும் சென்றுதிரும்பவேண்டும் என்றமுடிவுடன் எனது பயணத்தை கடந்த டிசம்பரில் ஆரம்பித்திருந்தேன். அப்போது கண்ட பார்த்த மனதைநெருடிய விடயங்களை இங்கே பதிவாக்க முயல்கிறேன்.
வவுனியா-ஓமந்தை இராணுவ சோதனை நிலையம். இராணுவ உடையென்றாலே தமிழர்களுக்கு ஏற்படும் பயஉணர்வு என்னையும் விட்டுவைக்கவில்லை. நான் ஒரு வெளிநாட்டுகுடியுரிமை பெற்றவன் என்றமுறையில் எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டாலும் அந்தசோதனைச் சாவடியில் நிற்கும்போது எதிரிகளின் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற பிரமை. அதிகாலை 0630. அந்தசோதனைச்சாவடியை தாண்டினால் அதிகாலை 0730. இதுவும் ஒரு குறிகாட்டியாக -இரண்டு தேசங்களாக பிளந்துவிட்ட இலங்கையை சுட்டிக்காட்டும். எப்படி இந்த இரண்டு தேசங்களும் ஒட்டப்போகின்றன.
இராணுவத்தினர் இராணுவ பாக்குகளுடன் வீதியினூடாக குழுக்கள் குழுக்களாக ஓடிக்கொண்டிருந்தார்கள். வீதிக்கருகாக உள்ள ஒருமைதானத்தில் இன்னுமொரு தொகுதியினர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.ஏனைய பகுதிகளிலிருந்து வடபகுதிசெல்வதற்காக வந்திருந்த ஏராளமான மக்களும் வாகனங்களுமாக நிரம்பிவழியும் இந்த வீதியில் ஏன் இவ்வாறு போர்முனைப்பை காண்பிக்கும்வகையில் பயிற்சி செய்கிறார்கள். மக்களுக்கு பீதியை ஊட்டியவாறு இவ்வாறாதொரு பயிற்சி ஏன்? அப்படியானால் சாமாதானம் எப்போது?எல்லாமே உலகத்தை ஏமாற்றும் நாடகமா? நான் இப்பயணத்தை தவிர்த்திருக்கலாமோ என என்மனம் ஒரு கணம் சிந்தித்தது.
அப்பகுதியெங்கும் இராணுவ பிரசன்னம். ஒருசில பொலிசாரை தவிர அனைத்துமே பச்சையிருள் மூடிக்கிடந்தது. அப்போது எனது வாகனசாரதி சொன்னார் "அண்ணை ரிவி கொண்டுவந்திருக்கிறியள் ரிமோட்டும் கொண்டுவந்தனியளோ?" ஏதோ சிக்கல் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்;டேன். (இன்னும் வளரும்)
|
|
|
|