|
இலங்கை தீவில் முஸ்லிம்களின் எதிர்காலம்
|
அண்மைய நாட்களில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்ல உறவுநிலை ஏற்படக்கூடிய வாய்ப்புநிலைகள் காணப்படுவதாக தெரிகிறது. முஸ்லிம்களின் தலைமைகள் எப்போதுமே தமக்குள் ஒற்றுமைப்படுகிறார்களோ இல்லையோ எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பதவிகளை பெற்றுக்கொண்டுவிடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒன்றில் கட்சி தனது கொள்கையை மாற்றி ஆளும் கட்சிக்குள் இணைந்துவிடும் அல்லது கட்சிக்குள் இருப்பவர்கள் ஆளும்கட்சிக்கு மாறிவிடுவார்கள். இதனால்தான் சாதாரண அப்பாவி முஸ்லிம் மக்களும் தமக்கான தலைமையை தீர்மானிக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். இதன் எதிர்வினையே முஸ்லிம் தலைமைகள் இப்போதும் முட்டிமோதிக்கொண்டு பலகட்சிகளாக தொங்கிகிடக்கிறார்கள்.
அண்மையில் முஸ்லிம் சமூக தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் "நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம்;. இதனை எவரும் மறுக்கமுடியாது. சிங்கள அரசு எப்போதுமே எங்களை சமமாக சம உரிமை உள்ளவர்களாக கருதபோவதில்லை என்பதை சுனாமி உதவி நடவடிக்கைகள் மூலமும் கண்டு கொள்ளலாம். சுpங்கள அரசுகள் தமிழ் - முஸ்லிம் உறவுகளை சீர்குலைப்பதன் மூலம் தங்களுடைய இலக்கை அடைவதில்தான் குறியாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான போராட்டம்." ஏன தெரிவித்திருந்தார்.
அக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஏ. எல். அப்துல் ஜவாத் - காத்தான்குடி முஸ்லிம் சமமேளனங்களின் செயலாளர் - "நாங்கள் விடுதலைப்புலிகளின் தோழரகள் என்ற வகையில் இக்கலந்துரையாடலுக்கு வந்திருக்கிறோம். நாங்கள் விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் பங்குபற்றியிருக்கிறோம். எங்கள் நண்பர்கள் உறவினர்கள் மாணவர்கள் பலரும் தமிழீழவிடுதலை இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்கள் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்தது. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் விடுதலைப்போராட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். சிலவேளைகளில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமான முஸ்லிம்கள் என்றவகையில் ஒருபோதும் அப்படி நடந்திருக்கவில்லை. சிங்கள இனவாதிகள் எங்களை பிரிப்பதற்கு முயற்சி செய்தார்கள். நாங்கள் ஒருபோதும் அவர்களின் பிரித்தாளும் போக்குக்கு உடன்படவில்லை".
"நாங்கள் ஒரு வேண்டுகொளை விடுதலைப்புலிகள் முன் வைக்க விரும்புகிறோம். நீங்கள் ஆயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் உங்கள் இலக்கை அடைவதற்காக இழந்திருக்கிறீர்கள். அதன்காரணமாக நீங்கள் இப்போராட்டத்தின் மூலம் கிடைக்கப்போகும் பலாபலனில் பங்கு கேட்பதற்கு எந்த அடிப்படையும்; இல்லை. எப்படியிருந்தாலும் எங்களையும் நீங்கள் சம உரிமைஉடையவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் பல வெற்றிகளை பெற்றுள்ளீர்கள். வரலாற்றில் உங்களுடைய அரசியல் இராணுவவெற்றிகள் பதியப்பட்டிருக்கின்றன. ஆதனைப்போல முஸ்லிம் மக்களுடனும் நீங்கள் தாராள மனதுள்ளவர்கள் என்பதை வரலாற்றில் பதியவைக்கவேண்டுமென விரும்புகிறோம்".
அக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஐ. எம். இப்ராகிம் - காத்தான்குடி முஸ்லிம் சமமேளனங்களின் தலைவர் - "உல்லை சுனாமியால் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு கிராமம். அரசாங்கம் எந்த உதவியையும் எம் மக்களுக்கு செய்யவில்லை. ஆனால் சிலரால் 50 அடி புத்தர்சிலையொன்று அப்பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் இராணுவத்தின் உதவியுடன் குடியமர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி கிராமஅலுவலர் அக்குறிப்பிட்ட சிங்கள மக்களையும் வாக்காளர்களாக பதியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இவ்வாறுதான் சிங்கள தலைவர்கள் சுனாமி நிதியை சிங்கள குடியேற்றத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அம்பாறை கடற்கரையோர கிராமங்கள் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. கொழுப்பிலிருந்து உதவிகள் வந்து சேர ஒருமாதத்திற்கும் மேலாக காத்திருந்தோம். ஆனால் இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களுடைய அரசியல்வாதிகள் ஒன்றையும் செய்யவில்லை. நாங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான் அரசுக்கெதிராக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்படவேண்டும் என்பதே. தமிழீழம் ஒருநாள் கிடைக்கப்போகின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த வெற்றி முஸ்லிம் சமூகத்தையும் உள்வாங்கியதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது" என்றார்.
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் யதார்த்த நிலையை புரிந்து கொண்டுள்ளதாகவே அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவ்வாறான புரிதல்களையும் தெளிதல்களையும் சிங்கள இனவாதம் பார்த்துக் கொண்டிருக்கப்போகிறதா? அண்மையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய அரசியற்துறை பொறுப்பாளரின் கொலை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
|
|
|
|