|
இலங்கை ஒரு வழிகாட்டி
|
இன்று இலங்கை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூல் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்வோர் அறிந்து கொள்ளக்கூடிய மிகவும் பயன் உள்ள நூல் அது ஒன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன். அப்புத்தகத்தை வாசித்த பின்னர் அவ்வாறான முழுமையான வழிகாட்டிநூல் ஏதாவது சிறிலங்கா அரசாங்கத்தினூடாகப் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறதா? என இணையப்பக்கங்கள் வழி பார்த்தபோது ஏமாற்றம் தான் காத்திருந்தது.
இப்புத்தகம் www.lonelyplanet.com எனப்படும் இணையத்தளத்துக்குரியவர்களால் அனைத்து நாடுகளுக்குமான வழிகாட்டி நூல்களின் வரிசையில் அமைந்ததாகும். தொடர்ச்சியாக மீள்பதிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இப்புத்தகத்தின் 2002 ஆம் ஆண்டுப் பதிப்பைத்தான் எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கான பதிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டதை இணையத்தளமூடாக அறியக்கூடியதாகவுள்ளது.இதற்கான எழுத்தாளர்கள் மூவரும் இலங்கைத்தீவின் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று இதனை தொகுத்துள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.
இனி புத்தகத்தின் உள்ளடக்கங்களைப் பார்ப்போம். என்ன நோக்கத்துக்காக இப்புத்தகம் வெளியிடப்படுகிறது என்பதை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் இலங்கையின் வரலாறு விபரிக்கப்படுகிறது. இலங்கையின் பண்டைய தமிழ், சிங்கள அரசர்கள் பற்றியும் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவம் பற்றியும் குறிப்பிட்டு விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களையும் அலசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களைபற்றிய குறிப்புகள் வருகின்றன. உதாரணத்துக்கு யாழ்ப்பாண நகரம் பற்றிய குறிப்புகளைக் குறிப்பிடவிரும்புகிறேன். ஒரு காலத்தில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததை இப்புத்தகம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.அதில் யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்குள்ள முக்கியமான ஆலயங்களையும் பிரதான நூல் நிலையத்தையும் அதற்கு நேர்ந்த அவலத்தையும் தொட்டுகாட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வரும் சிறுதலைப்புகள்: சந்தைகள், தங்ககங்கள்(அதன் விலைப்பட்டியலுடன்), உணவகங்கள், போக்குவரத்துமுறைகள் என நீண்டு செல்கிறது.
அடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியத்துவமான இடங்கள் எவையெனக் குறிப்பிட்டுள்ளார்கள். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என அழைக்கப்படும் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டதையும் பின்னர் அவர்கள் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவ்விடுதலைப்போராட்டத்தில் முதலில் கரும்புலியாகச் சாவடைந்த மில்லரின் கல்லறை நெல்லியடியில் அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வல்வெட்டித்துறை நகரை பற்றிக் குறிப்பிடும் போது அங்குள்ள அம்மன் கோவிலைப் பார்க்கும்போதே அந்நகரம் எவ்வாறு முன்னர் செழிப்பாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யமுடியும் என அவ்வெழுத்தாளர் கூறுகிறார். அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் வழிபடுகின்ற கோவில் என விளிக்கும் அவர்கள், அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள பிரபாகரின் வீட்டைப் பார்வையிட அங்கு நிற்பவர்களிடம் விசாரியுங்கள் எனக் கூறுகிறார்கள்.
தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா என நீண்டு செல்கிறது. அங்கு இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சோதனை முகாம்கள், விடுதலைப்புலிகளின் வரிவிதிப்பு நடைமுறைகள் அவர்கள் வெளிநாட்டு பயணிகளை அனுசரிக்கும் நடைமுறைகளையும் கூடக் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்து முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தமிழ், சிங்கள பயன்பாட்டுச் சொற்களும் குறியீடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக தமிழில் வெளியே - Exit - veliye உள்ளே - Enterance - ullay ஆண்கள் - Man - Aankal பெண்கள் - Woman - Penkal
இவ்வாறு 'காவல்துறையை அழை', 'வைத்தியசாலை எங்கே?' என்பன போன்ற அவசர, அவசிய சொல்லாடல்களையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கவேண்டியது.
சிறிலங்கா அரசாங்கத்தினூடாகவோ அல்லது அதனது பேரினவாத அமைப்புகளுடாகவோ வெளிவிடப்பட்ட எந்த வெளியீடுகளும் இலங்கைத்தீவின் அனைத்து இடங்களையும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்பதையும், இவ்வாறான கையேடுகள் கூட எமது மக்களைப் பற்றியும் அங்குள்ள சூழ்நிலைகள் பற்றியும் வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அவைபற்றிய விளக்கமான நூல்களை அறிஞர்கள் வெளிவிடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்..
|
|
|
|