|
மொரிஷியஸில் தமிழைத் தேடும் தமிழர்கள்
|
தமிழர்களுக்காக வெளியாகும் `தமிழ் வொய்ஸ்' பத்திரிகை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமே அச்சாகிறது
`தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று மார்தட்டி கொள்ளும் அந்தத் தமிழர்களால் தமிழ் பேச முடியவில்லை என்பது வேதனையாக இல்லையா?
கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மொரிஷியஸ் நாட்டுத் தமிழர்களின் நிலைதான் இப்படி இருக்கிறது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நான்கு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் மொரிஷியஸ் சென்றிருந்தார். அவருடன் சென்றபோதுதான் இந்த நிலையைக் காண முடிந்தது.
கடந்த 1820 களிலேயே மொரிஷியஸ் நாட்டுக்கு பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் தமிழர்கள், அதன் பின்தான், பிஹாரிகளும், குஜராத்தியர்களும், ஆந்திர மாநிலத்தவரும் அங்கு வரத் துவங்கினர்.
இப்படி மொரிஷியஸில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை, மொரிஷியஸ் மக்கள் தொகையான 12 இலட்சத்தில் 68 சதவீதம் (51 சதவீதம் இந்துக்கள், 17 சதவீதம் முஸ்லிம்கள்) அதில் தமிழர்கள் 6 சதவீதம் பேர். பெரும்பான்மையாக இருந்தாலும் கூட, இந்தியப் பூர்வீக மக்கள் மதம், மொழி, சாதி என்று பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றனர்.
மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே உள்ள பிரெஞ்சோ- மொரிஷியர்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர். 3 சதவீதமாக உள்ள சீனர்கள், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். ஆபிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கிரியோல் சமூகத்தினர் 28 சதவீதம் இருந்தாலும், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
மொரிஷியஸ் ரூபா நோட்டில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் ரூபா மதிப்பு அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தில் தமிழர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழர்களில் பெரும்பாலானவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
இங்கு ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக, கோபுரங்களுடன் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அதிகம்.
காவடி ஆட்டம், சிவராத்திரி, தீ மிதிப்பு திருவிழா, தமிழ்ப் புத்தாண்டு என எல்லா விழாக்களையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தினசரி கோயிலுக்கு செல்லும் தமிழர்கள், `தமிழில் 'பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடுகின்றனர். ஆனால், தமிழ் பேசத் தெரியாது. பிரெஞ்சு, ஹிந்தி, ஆங்கிலம் பேசுகின்றனர்.
ஹிந்தி மொழி அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில், தமிழ் மட்டும் மறைந்து போவதற்கு, தமிழர்களிடையே ஒற்றுமை உணர்வு இல்லாததும் முக்கிய காரணம். சுய ஆதாயங்களுக்காக தமிழையே காட்டிக் கொடுக்கும் நிலைக்கு சிலர் சென்றுவிட்டனர் என்று இங்குள்ள தமிழர்கள் மனம் வெதும்புகின்றனர். ஹிந்தி பேசுவோர் தங்கள் உரிமைகளைப் பெற்றுவிட்ட நிலையில், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பெரிய அளவில் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. தமிழர்களைப் பயன்படுத்தி செல்வாக்குப் பெற்றுவிட்ட ஹிந்தி பேசும் மக்கள், தற்போது தமிழர்களைக் கைவிட்டுவிட்டனர்.
இந்த நிலையில், தமிழ் கோயில்கள் சம்மேளனம் என்ற பெயரில், சுமார் 150 கோயில்களைக் கொண்ட அமைப்பு தமிழுக்காகக் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. அதில், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட தமிழ் லீக், இனிய தமிழ் ஆகிய அமைப்புகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
`பாராளுமன்றத் தேர்தல்களில், பல்வேறு கட்சிகளின் சார்பிலும் முன்பு 7-8 ஆசனங்கள் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. தற்போது நான்கு அல்லது ஐந்தாகக் குறைந்துவிட்டது. குறைந்தபட்சம் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்து வந்தது. தற்போது, இரண்டு அமைச்சர்கள்தான் உள்ளனர். அதனால், தமிழர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடத் துவங்கியிருக்கிறோம்' என்றார் தமிழ் கோயில்கள் சம்மேளனத் தலைவர் நரசிங்கம்.
`மொரிஷியஸ் தொலைக் காட்சியில் ஹிந்திக்கு இணையாக தமிழுக்கு வாய்ப்புத் தரக் கோரி 6 மாதங்களுக்கு முன் 3 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதேபோல், அரசுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு போதிய வாய்ப்புக் கேட்டுப் போராடி வருகிறோம். தமிழ் புத்தாண்டு தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்' என்றார் அவர்.
`தமிழர் என்ற பெயரைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு உரிமை உள்ளிட்ட சலுகைகளுக்காகப் போராடும் உங்களால் தமிழ் கூட பேச முடியவில்லை. தமிழ் மக்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை?' என்று அவரிடம் கேட்டபோது, `இதுவரை தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான சரியான முறையைக் கடைப்பிடிக்கவில்லை. தற்போது, எந்த முறையைக் கையாண்டால் எளிதாகத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்பது குறித்து மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் மூலம் முயற்சி எடுத்து வருகிறோம்' என்றார் நரசிங்கம்.
அரசு அனுமதியளித்தால், தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை பணியில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். தமிழ் கோயில்கள் சம்மேளனமும், அரசியல் வட்டாரத்துக்கு நெருங்கியவரான பர.வேலாயுதம் தலைமையில் இயங்கும் தமிழ் கலாசார சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கின்றன. மொரிஷியஸ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு சிலர் பலியாகிவிட்டனர். ஆனால், அந்த சம்மேளனத்துடன் சேர்ந்து செயல்படவே விரும்புகிறோம்' என்றார் நரசிங்கம்.
`தமிழ் வொய்ஸ்' என்ற பெயரில் தமிழர்களுக்காக வெளியாகும் பத்திரிகை, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில்தான் அச்சாகிறது. தமிழ் இல்லை. இருந்தாலும், தமிழர்களுக்காக பல்வேறு வழிகளில் போராடுவதாகக் கூறுகிறார் அப்பத்திரிகையின் ஆசிரியர் நாயுடு.
உலக அளவில் தமிழை வளர்க்க தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் முயற்சி எடுத்தால் மொரிஷியஸில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் குற்றுயிராகக் கிடக்கும் தமிழுக்குப் புத்துயிரூட்ட முடியும் என உண்மையான தமிழ் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், மொரிஷியஸில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவ முடியும். அவர்கள் அப்படி முயற்சி எடுத்தால், அது தமிழுக்கு ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும் என்று தெரிவித்தார் போர்ட் லூயி கடற்கரை விடுதி ஒன்றில் பணியாற்றும் தேவன் ராமச்சந்திரன்.
நன்றி தினமணி.
|
|
|
|