|
சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புதல்
|
கடந்த வாரம் வெளியான சண்டேலீடரில் வெளிவந்த நேர்காணலை ஒட்டிய பதிவாக இப்பத்தி அமைகிறது. முன்னர் சந்திரிகா அரசில் மிக முக்கியமானவராக இருந்த எஸ்பி திசாநாயக்காவே சில தகவல்களை வெளியிட்டிருந்தார். வரலாறு பல பாடங்களை தந்து இருக்கிறது. வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் ஞானோபதேசம் பெற்ற முன்னாள் தமிழ்பொலிஸ்மா அதிபரை கடந்த பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். எஸ்பி திசாநாயக்கா, ஜிஎல். பீரிஸ் ஆகியோர் இன்று சந்திரிகா அரசில் இருப்பவர்களை விட உயர்நிலை அந்தஸ்தில் இருந்தவர்கள். சந்திரிகாவின் தீவிர விசுவாசிகளாக இருந்த இவர்கள் ஏன் ஐதேகட்சிக்கு மாறினார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை. ஆனால் சந்திரிகா எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வதற்கு இது சில வேளை பயன்படக்கூடும்.
அவர் அந்த நேர்காணலின்போது சந்திரிகாவின் அசட்டுத்தனமான போக்குபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். "சந்திரிகா தனக்காக 03 சார்க் நாட்டுத்தலைவர்களை 27 நிமிடங்கள் காத்திருக்க வைத்திருக்கிறார். சுனாமிக்கு பின்னர் கூட முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் உம் பில் கிளின்டனும் சந்திரிகாவின் வருகைக்காக 45 நிமிடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்."
பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர் ஒரு ஆய்வுப்புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக குறிப்பிட்டார். " நான் இப்புத்தகத்துக்காக பல விடயங்களை தயார்படுத்திவருகிறேன். நான் குறிப்பிட்ட பலரிடம் சில கேள்விகளை அனுப்பி அவர்களின் பதிலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். இப்புத்தகம் சந்திரிகாவைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. பண்டாரநாயக்கா குடும்பத்தை அதன் வரலாறை இப்புத்தகம் வெளிக்கொண்டுவரும். எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்தார். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் உண்மையில் தமிழ்க்குடும்பம். அவர்கள் பலவற்றை செய்து தங்களது பெயர்களை மாற்றினார்கள். "
சந்திரிகாவின் அரசியல் வரவுக்கு தோள் கொடுத்த பலரில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் கட்சி மாறிப்போனார்கள். இந்தப்பட்டியல் எனது நினைவுக்கு எட்டியவரை வசந்தராஜா வில் தொடங்கி இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குள்ளும் சிலர் இப்போதும் சந்திரிகாவுடன் தொடர்ந்து இருந்து சாதனை படைக்காதவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் வேறு யாருமல்ல. டக்ளசும் லக்ஸ்மன் கதிர்காமரும் தான். அவர்கள் தங்கள் வாழ்நாள் மட்டும் சந்திரிகாவுடன் இருப்பார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை.
தற்போது சந்திரிகாவுக்கும் ஜேவிபிக்கும் இடையில் பனிப்போர் தொடங்கிவிட்டது. இதனை மேற்கத்தைய அணுகுமுறையிலோ அல்லது புதுவிதமான முறையிலோ சுமூக நிலைக்கு கொண்டுவருவதென்பது சந்திரிகாவின் கடந்த கால அரசியலையும் ஜேவிபியின் நிகழ்கால அரசியலை நன்கு அறிந்தவரகள் புரிந்து வைத்திருப்பார்கள். ஒன்று மட்டும் உறுதியானது. சந்திரிகா இருக்கும்வரை ஜேவிபியும் நினைத்தபாட்டுக்கு ஆடமுடியாது. ஆனால் இரண்டு இக்கட்சிகளும் இணைந்திருக்காமலும் ஐதேகட்சிக்கு முகம்கொடுக்கமுடியாது. இதற்கு இப்போது ஜேவிபிக்குள்ள ஒரேவழி சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புவதே.
முடிவு பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கும். அதனை எவ்வாறு கொண்டுசெல்வது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
|
|
|
|