|
கருணா என்ற புனைபெயரில்
|
அண்மைக்காலமாக கிழக்கில் ஒரு நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அனைவரும் கண்டுகொள்ளலாம். கருணாவின் அப்புறப்படுத்தலுடன் முடிவுக்கு வந்து ஓரளவு அமைதியடைந்திருந்த கிழக்கு மாகாணம் மீண்டும் இரத்தம் சொட்டத்தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த இராணுவப்பொறுப்பதிகாரி ஒருவர் கருணாவின் கை ஓங்கிவருவதாகவும் இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எப்படி இருக்கிறது கதை?
இதன் தொடர்கதை எப்போதோ திட்டமிடப்பட்டுவிட்டபோதும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதன் நோக்கமென்ன? கருணா என்ற புனைபெயரில் விடுதலைப்பொராட்டத்துக்கு எதிரான சக்திகளின் தொடர்புடன் மீண்டும் சிறிலங்கா இரகசிய இராணுவப்பிரிவின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?
ஒரு நாள் ஒரு கும்பல் புலிகள் மீது தாக்குதல் மேற்கொள்வதும் அதனை இராணுவமும் பொலிசாரும் சேர்ந்து மறுநாள் ஓரிருவரை கைது செய்து விடுவது போலவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் காட்சிகள் நகர்ந்து செல்வதை இத்திரைப்படம் மூலம் காணக்கூடியதாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் வில்லனே கதாநாயகனாகும் நிலைகண்டு குழம்பிபோய் உண்மையில் கருணாவின் கூலிகள் தான் இதனை செய்கிறார்கள்.என நிலை தடுமாறி நிற்கும் நிலை.
அததுகிரிய என்ற பகுதியில் செயற்பட்டு வந்த இரகசிய இராணுவ பிரிவு பற்றி நீங்கள் முன்பு அறிந்திருப்பீர்கள். இவ்வணி ஏனைய எந்த இராணுவப்பிரிவுகளோடும் இணைந்து செயற்படாமல் இரகசியமாக இராணுவதளபதிக்கு கீழ் நேரடியாக முப்படைகளின் தளபதியான சந்திரிகாவின் ஆசியுடன் செயற்ப்பட்டு வந்ததையும் பின்னர் அது பற்றி ரணிலின் ஆட்சிக்காலத்தின்போது வெளிப்படுத்தப்பட்டதையும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவது இப்போது பொருத்தமாக இருக்கும்.
விடுதலைப்புலிகளால் தமிழ் முஸ்லிம் உறவுகள் சீர்செய்யப்பட்டு புரிந்துணர்வான் சூழ்நிலையொன்று கட்டியமைக்கப்பட்ட நேரத்தில் அப்போதைய தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கொல்லபட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது மூவினங்களை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் தற்செயலான சம்பவங்கள் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.
யுத்தம் திரைமறைவில் கருணா என்ற புனைபெயரில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நாம் இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருக்கப்போகிறோமா?
|
|
|
|