|
கார்த்திகை 27
|
எங்கே... எங்கே... ஒருகணம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.
தமிழீழ தேசவிடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய எழுச்சி நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈய்ந்தவர்களுக்காக ஒருகணம் அவர்களை அஞ்சலிப்போம்.
போராட்டம்பற்றியும், விடுதலைபற்றியும், அதன் கடுமையான பயணங்கள் பற்றியும் பெரும்பாலானோர் அறிந்திருக்காத காலகட்டத்தில் 1976 இல் பொன் சிவகுமாரன் முதலாவது மாவீரனானான். எதிரியின் சுற்றிவளைப்பின்போது காயமடைந்த நிலையிலும் தான் எதிரியின் கையில் உயிரோடு பிடிபடகூடாதென்பதற்காக சயனைற் உட்கொண்டு தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் மாவீரனானான். அன்று தொடங்கிய மீள்எழுகையின் வீரவரலாறு இன்றும் தொடர்கிறது.
இராணுவத்தின் சுற்றிவளைப்பில் காயமடைந்து பின்னர் தமிழகத்தில் மருத்துவசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது, வீரமரணமடைந்த சங்கர் தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரனானான். மாவீரன் சங்கர் தனது இறுதிமணித்துளிகளில் கூட தம்பி தம்பி என தன்தலைவனை அழைத்தவாறே வீரச்சாவடைகிறான்.
விடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்படுகிறார்கள். சிறிலங்காவின் நீதிமன்றத்தில் அவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்களிடம், உங்கள் இறுதிஆசை எதுவென கேட்டார்கள். எனது இரண்டு கண்களையும் ஒரு தமிழனுக்கு தானமாக கொடுக்கவேண்டும். அந்த கண்கள் ஊடாக மலரும் தமிழீழதாயகத்தை என் கண்களால் காணவேண்டும் என கேட்டார். ஆனால் பின்னர் அதே சிறைச்சாலையில் அவரை வெட்டி கொலைசெய்து, அவரது கண்களை தோண்டிவெளியே எடுத்து இதோ தமிழீழம் பார் என காடையர்கள் எள்ளிநகையாடியதை எண்ணிப்பார்க்கிறோம்.
ஒரு கைக்குண்டு தவறுதலாக வெடிக்கும்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில செக்கன்களில் அது வெடித்துவிடப்போகிறது. அப்படி வெடிக்கின்றபோது தன் சக போராளிகள் பலரை இழக்கவேண்டிய நிலை. உடனடியாகவே தனது சக போராளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்பு என்ற போராளி அவ்வெடிகுண்டை தனது வயிற்றோடு வைத்தவாறே குப்புறப்படுத்து வெடித்து மாவீரனாகிறான்.
விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகளை கொண்ட காலப்பகுதி. இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சீலன் காயமடைகிறார். இனி தப்பியோடமுடியாத நிலை. தனது நண்பனிடம் துப்பாக்கியை கொடுத்து தன்னை சுட்டுப்போட்டு தப்பியோடுமாறு சீலன் கட்டளையிடுகிறான்.
இராணுவத்தினர் எப்படியாவது முன்னேறிவிடவேண்டும் என்றநிலையில், இழந்துவிட்ட இராணுவ வலிமையை மீளப்பெற்றுக்கொள்ளும் முகமாக அக்கினிச்சுவாலை என்ற பெயரில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பெண்போராளிகளால் பாதுகாக்கப்பட்ட பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னேறி கொண்டிருந்தார்கள். இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண்போராளிகளின் நிலைகள் கைப்பற்றகூடிய சூழ்நிலை. அக்களமுனையை செல்வி வழிநடாத்திகொண்டிருந்தார். இராணுவத்தினர் செல்வியின் நிலையை நெருங்கிவிட்டநிலையில் ஆட்லறிகளால் கூட பாதுகாப்பு அளிக்கமுடியாத நிலை. இக்கட்டான சூழ்நிலையில் செல்வி உறுதியாக முடிவெடுத்தாள். தன்னுடைய நிலைகளுக்கே ஆட்லறிகளால் தாக்கும்படி கட்டளை பிறப்பித்து சண்டை செய்து வீரச்சாவடைந்தார்.
தாம் இறக்கும்நிலை ஏற்பட்டபோது தன்னால் தனது மக்கள் இராணுவத்தினரால் கண்டுகொள்ளபடக்கூடாதென்பதற்காக தனது முகத்துக்கு கைக்குண்டை வெடிக்கவைத்து வீரமரணமடைந்த முகம்தெரியாத மறவர்களை எண்ணிபார்க்கிறோம். வன்னிதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புக்குட்பட்டபோது எல்லைப்படை வீரர்களாக இணைந்து வீரகாவியமான குடும்பத்தலைவர்களை எண்ணிப்பார்க்கிறோம்.
இப்படி எத்தளை போராளிகளை இழந்திருக்கிறோம். இன்றுவரை 17000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தமிழினவிடுதலைக்காக விதையாகியிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து ஒருகணம் அஞ்சலிப்போம்.
|
|
|
|