|
ஏழு சக மூன்று சமன் ஏழு
|
எப்படியோ ஒருவாறாக சிறிலங்காவுக்கான சனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். வரலாறுகள் புதிதாக எழுதப்படுகின்றன. வெளிப்படையான பார்வைக்கு நல்ல மனிதராக தெரியும் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டுஇருக்கிறரர். தமிழ் மக்களுக்கான உரிமைகளை தரமாட்டார் என கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச தமிழர்களின் மறைமுக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.
சிறிலங்காவின் அரச தலைவராக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகளே தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதில் தற்போது பதவியேற்கவிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு கூட கருத்துவேறுபாடு இருக்காது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் "நீங்கள் சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்தையிட்டு யாருக்கு முதலில் நன்றி செலுத்துவீர்கள்" என கேட்டால் பதில் நிச்சயமாக புலிகளுக்கு என்பதாகவே இருக்கும்.
சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளை மேலதிகமாக பெற்றே மகிந்த தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதேவேளை சுமார் 07 லட்சம் வாக்குகளை கொண்ட யாழ்ப்பாணத்தில் சுமார் 700 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் தேர்தல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானத்திருந்தால் ரணிலுக்கே நிச்சயம் வாக்களித்திருப்பார்கள். தமிழர்கள் தேர்தலை புறக்கணித்ததன் மூலம் கடும்போக்காளரான மகிந்த வென்றிருக்கிறார்.
தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை வெளிப்படையாகவே எதிர்க்கும் மகிந்த ராஜபக்சவின் தெரிவில் தமிழர் தரப்பின் "பங்களிப்பு" சரியானதா? தமிழர் தரப்பு தேர்தலை புறக்கணித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ச தெரிவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது சரியானதுதானா?
பிரேமதாசா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என சொன்னபோது தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். அதற்கு பின்னர் வந்த சந்திரிகா சமாதான தேவதையாக வாக்கு கேட்டபோது தமிழர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த அனைவரும் தமிழரருக்கான தீர்வை முன்வைப்பதற்கு பதிலாக யுத்தத்தை மேற்கொண்டனர்.
அவ்வாறான சூழ்நிலையில் ரணிலை மீண்டும ஒருமுறை நம்பமுடியுமா? அல்லது தமிழர்களுக்கு அவர் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாரா? ரணில்விக்கிரமசிங்க தமிழர்களின் எந்த பிரதிநிதிகளுடனும் தமது கொள்கை திட்டம் தொடர்பாககோ அல்லது தமது சமாதான திட்டம் தொடர்பாகவோ எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத்தீவின் அசைவியக்கத்தின் ஒரு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் முடிபுகளை எடுக்கும்போது விடுதலைப்புலிகளுடன் நிச்சயம் கலந்துரையாடியிருக்கவேண்டும். அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவேண்டும்.
தமிழர்களுக்கு நல்லவராக காட்டிக்கொண்ட ரணில் இதனை செய்யாதது தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அது மட்டுமல்லாது தமது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்தவர்கள் தாங்களே எனவும் சர்வதேச பாதுகாப்பு பொறிக்குள் விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டியபோது அதற்கான பதிலை தமிழர் தரப்பு "இப்போதைய நிலையில்" வேறு எவ்வாறு வழங்கமுடியும்?
இவற்றுக்கு அப்பால், சாதாரணமான சுனாமி நிவாரண சபைக்கான அதிகாரத்தை வழங்குவதற்கே சிறிலங்கா சட்டங்கள் தடுக்கின்றபோது தமிழருக்கான நிரந்தர தீர்வை அவை வழங்குமா என்பதும் அதற்கான தலைவரை தெரிவு செய்வதற்கு தமிழர்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டுமா என்பதும் சிந்திக்கப்படவேண்டிய விடயங்களே.
|
|
|
|