|
காசிஆனந்தன் சிறப்புபேட்டி
|
`உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடுதலையிலிருந்து என் உணர்வு விலகாது'
`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வர முடியாமல், வர விடாமல் தடுப்புகள் போடப்பட்டாலும், என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்தாலும் தடுக்க முடியாது'
உலகம் முழுவதிலும் பரவிய தமிழன் எங்காவது ஓரிடத்தில் தமிழனாக நிலைத்தானா?' என்று நியாயமாகவே கேட்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். 50,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழைப் புறந்தள்ளி,-1,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்கள் இவருடைய கவனத்துக்குள் அதிகமாக இருக்கிறார்கள். மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த நமது கவிஞர் இன்று தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார்.
தனது மொழிமீது கொண்டுள்ள தீராப் பற்றுதலால், பிறமொழிகளெதுவும் வந்துகலந்துவிடக் கூடாதென்று கருத்துரைக்கின்றார். இதுவரை கலந்து விட்டவைகளைக் களைந்து கொள்வதற்கு தனது படைப்புகளில் அவர் தருகின்ற விளக்கங்கள் கனதியானவை. 2004 இல் அவர் வெளியிட்ட `தமிழனா..... தமிங்கிலனா?' என்ற நூலில் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் மொழிக் கலப்பை முறையாக விமர்சித்திருப்பதுடன் தமிழ் மொழியின் முரண்பாட்டாளர்களையும் முடிந்தவரை சாடியிருக்கிறார்.
`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வரமுடியாமல்; வர விடாமல் தடுப்புகள் நேர்ந்தாலும் என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்து தடுக்க முடியும்? என்கிற மிடுக்கான கேள்வி அவருடைய விழிகளில் எப்போதுமே மிதந்து கொண்டிருக்கிறது. நிறையவே எழுதுகிறார்.
எங்கும் இருக்கிற தமிழர்களுக்காக அவரால் எங்கிருந்தும் எழுத முடியும்! தமிழ்நாட்டின் மேடைகள் பல கவிஞர் காசி ஆனந்தன் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதால் ஓய்வுக்கும் அவருக்குமான நெருக்கம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், முயன்று கிடைத்த அவருடனான ஒருமணிநேர சந்திப்பில் தயாரான இப்பேட்டி நமது வாசகர்களுக்குக் கிட்டிய வாய்ப்பே!
இங்குள்ள கவிஞர்களின் மனோநிலையை ஈழத்துக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள். முடிவு சொல்லுங்கள்?
இங்கு உவமை தேடாமல் உண்மையை எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். நம்மவர்கள் ஈழத்தில் எங்காவது நடந்துபோகும்போது செவ்வரத்தம் பூவைப் பார்த்தால் அதில் போராளியின் குருதியைப் பார்க்கிறார்கள். அதுவே உண்மையான இலக்கியமும் கூட! ஆனால், குருதியில் செவ்வரத்தம் பூவைப் பார்ப்பது இலக்கியம் அல்ல. இங்கு அப்படித்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். வர்ணனை அதிகமாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை.
உங்களுடைய எழுதுகோல் இங்கே சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இருக்கிறதா?
எந்தச் சூழலும் என்னுடைய எழுதுகோலைக் கட்டுப்படுத்தாது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடைய உணர்வு ஈழத்தின் விடுதலையிலிருந்து விலகி ஓடாது. சில விடயங்களை நான் எழுதக்கூடாது என்கிற நிலை இருந்தாலும்கூட, எழுதக்கூடிய வகையில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
சூழல்கள் தடுக்கிற கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு எழுத என்னால் முடியும்! (குரலில் மிகுந்த உறுதி தெரிகிறது) நேற்றைய, இன்றைய ஈழப் போராட்டத்தின் நாளைய நிலைமை என்ன?
வெற்றிதான்! எப்பொழுதும் அறமே வெல்லும் என்று நான் நம்புகின்றேன். தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழிப்பது என்கிற சிங்கள இனவெறிக் கோலம் அறத்துக்கு முரணானது.அறத்தையே கொலை செய்வது, அறத்துக்கு குழி பறிப்பது. அறத்துக்கு எதிரான இனவெறி எக்காலத்திலும் வெல்லாது. இறுதியான வெற்றி அவர்களிடம் போய்ச் சேராது என்பது உறுதி!
இன்னொரு விடயம், இதுவரையில் 18,000 பேர் களத்தில் போராடி மடிந்திருக்கிறார்கள். ஒரு போராட்டத்தை வளர்த்து வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு வந்து விட்டு மடிந்தார்கள். இவ்விரண்டு காரணங்களும் வெற்றி தவிர்க்கப்பட முடியாதது என்பதற்கும் தமிழீழம் மலரும் என்பதற்குமான நம்பிக்கைதான்!
உணர்ச்சிக் கவிஞர் என்று விளிக்கப்பட்டவர் நீங்கள். இது....(இடைமறிக்கிறார்)
உணர்ச்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என்றோ ஒருநாள் ஆதித்தனார் ஐயா என்னை அப்படி அழைத்தார். அது அவர் என்மீது கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு. என்னுடைய பெயருக்கு முன்பாக இதை நான் போட்டுக் கொள்வதில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் இது தாராளமாக இருக்கிறதே!
ஆம். வேந்தர், அரசர், பேரரசர், கோ, கவிக்கோ என்றெல்லாம் பல முன்னொட்டுகள். தமிழன் அடிமையாக வாழ்கிற காலத்தில் இவன் அரசு என்றும் வேந்தன் என்றும் பெயருக்கு முன் பின்னாகப் போட்டுக் கொண்டு அரசை இழந்து நொண்டியாக நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில், பாவை எழுதுகிறோம். அவற்றை நம்முடைய மண்ணுக்காகவும் மொழிக்காகவும் படைத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
ஈழம், மக்கள், விடுதலை - இவற்றுக்காகவே உங்களுடைய எழுதுகோல் இயங்கும் என்பது போன்றதொரு அடையாளத்தை - உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தியிருந்த நீங்கள் இன்று அங்கில்லை. இது குறித்த உங்களுடைய உளப் போக்கு எப்படி இருக்கிறது?
தூரங்களால் என்னுடைய உணர்வுகளை இல்லாமல் செய்ய முடியாது. நான் எங்கிருந்தாலும் என்னுடைய சிந்தனை ஈழத்தினின்று அகலாது. களத்தில் நிற்கிற வீரர்களின் ஈகம், தற்கொடை- உயிரிழப்பு இவற்றுக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியவில்லை என்கிற இயலாமை என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறது.
நமது மண்ணின் விடுதலைக்காக நம்மால் ஆன பணியை நம்முடைய ஆற்றலுக்கேற்ப செய்ய முடிந்ததைச் செய்யாமல் யாருமே மடிந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம்!
போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிற ஒரு எழுதுகோலாளனுக்குச் சமமாக யாரைக் கொண்டாட முடியும்?
போராளிக்கு உணவளிக்கிற எவரையும் கொண்டாட முடியும். ஒரு இலக்கியகாரனுக்குச் சமமாக உணவளித்த தாய் ஆகிவிடுகிறாள். இதுவெல்லாம் வரலாற்றின் மிகப் பெரும் பகுதியும் பதிவுமாகும்.
போராளிகளுக்கு; போராட்டத்துக்கு உணவு கொடுத்து உதவுகிற எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்கிறீர்கள். `இதைச் செய்த நாங்கள் அவர்களால் தூக்கி எறியப்பட்டோம்' என்ற கருத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி.....!
முஸ்லிம்கள் நேற்றைப் போலவே இன்றும் நாளையும் கூட தம்மை இப்போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழீழத்தில் இருக்கிற முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களல்ல அல்லது இஸ்லாம் மதத்தில் பிறந்து வளர்ந்து உருவானவர்களுமல்ல. இவர்கள் தமிழீழத்தில் தமிழர்களாகப் பிறந்து, தமிழர்களாக வளர்ந்து, இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் இன்றும்கூட மட்டக்களப்பில் உள்ளவர்களிடம் `நீங்கள் யார்' என்று கேட்டால் `நாங்கள் இஸ்லாம் ஆனவங்க' என்று தான் சொல்வார்கள்.
அவர்கள் நம்முடைய பழைய தமிழர்கள். ஆனால், அவர்களிடையே தேசிய உணர்வைவிட; மத உணர்வுதான் காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்படுகிறது. நீங்கள் பழைய தமிழர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.
அவர்களிடம் மிகவும் பணிவாக நான் ஒரேயொரு எடுத்துக் காட்டினைக் கூற விரும்புகிறேன். நாம் இன்றுவரையில் போற்றி மதிக்கத் தகுந்த இஸ்லாமியர்கள் குர்திஸ்தானில் இருக்கிறார்கள். ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைகளில் குர்திஸ் மக்கள் வாழ்கிறார்கள். ஈரானில் வாழ்கிற இஸ்லாமியர்கள் தனியொரு தேசிய இனம். அவர்கள் பாரசீக மொழி பேசுகிற பாரசீக தேசிய இனம். ஈராக்கில் வாழ்பவர்கள் அரபு மொழி பேசுகிற அரேபிய தேசிய இனம். துருக்கி எல்லையில் இருப்பவர்கள் துருக்கி மொழி பேசுகிற துருக்கிய தேசிய இனம். ஆனாலும், இம்மூன்று தேசிய இனத்தினரும் இஸ்லாம் மதத்தவர்கள். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இம்மூன்று நாடுகளின் எல்லைகளிலும் இருக்கிற குர்திஸ் மக்கள் குர்திஸ் மொழி பேசுகிற குர்திஸ் தேசிய இனம். ஆனால், இவர்கள் இஸ்லாம் மதத்தையே பின்பற்றுகிறார்கள்.
துருக்கியையும் ஈரானையும் ஒருபுறம் விட்டு, ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கு உள்ளே வாழ்கிற இஸ்லாமியர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். எல்லையில் வாழ்கிற இஸ்லாமியர்கள் குர்திஸ் மொழி பேசுகிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன?
குர்திஸ் மக்களுடைய மதத்தைத் தோற்றுவித்த மிகப் பெருந்தலைவர் - முஹமது நபி அவர்கள். இவருடைய தாய்மொழி அரபு மொழி. அரேபியர்களுக்குப் பக்கத்திலேயே வாழ்ந்தாலும்கூட குர்திஸ் மக்கள் அரபுமொழி பேசவில்லை. தம்முடைய மதத்தைத் தோற்றுவித்து வழிகாட்டிய நபி பெருமானுடைய தாய்மொழியும் திருக்குர்ஆன் எழுதப்பட்டுள்ள மொழியுமான அரபு மொழியை குர்திஸ் மக்கள் பின்பற்றவேயில்லை. தம்முடைய இனத்தைவிட, மொழியைவிட, மதம்தான் உயர்வானது என்று குர்திஸ் இனம் நினைத்திருந்தால்; தம்முடைய புனித நூலான திருக்குர் ஆன் எழுதப்பட்டுள்ள மொழியை ஏற்றுக்கொண்டு அரபு மக்களுடைய மொழியைப் பேசி அவர்களுடனேயே இரண்டறக் கலந்து வாழ்ந்திருக்க முடியும். ஆனால், குர்திஸ்கள் தமது தேசிய இனத் தன்மையையும் மொழியையும் மதத்துக்காக விட்டுக் கொடுக்கவில்லை.
ஆனாலும், அல்லாஹ்வையோ, நபிகளையோ,குர் ஆனையோ குர்திஸ்கள் மறந்துவிடவில்லை. தம்முடைய உயிரிலும் மேலானது தமது மொழி என்று களத்தில் நின்று இன்றுவரை போராடி வருகிறார்கள். அவர்களுடைய உணர்வுக்கு நான் தலை வணங்குகின்றேன். இந்த தேசிய உணர்வு ஈழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
`ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழீழத்திலிருந்து விரட்டப்பட்டோம்' என்று இன்றுவரை கூறிக் கொண்டிருக்கிற முஸ்லிம்கள் உங்களுடைய இக்கருத்தோடு முரண்பட மாட்டார்களா?
போராட்ட களங்களில் சில நேரங்களில் ஏதாவது சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதுண்டு. மிகப் பெரியளவிலான இழப்புகளுக்கு மத்தியில் ஒரு இனம் நிமிர முற்படுகின்றபோது சில குறைபாடுகள் நேர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. வரலாற்றில் அவற்றையெல்லாம் நாம் திருத்திக் கொண்டு மேல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.
தவிரவும், ஈழத்து முஸ்லிம் மக்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இவர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு முழு அளவில் தமது பங்களிப்பெதனையும் செய்யவில்லை.
கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட போராட்ட காலத்தில் 18,000 விடுதலைப் போராளிகள் தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய மக்களின் சொந்த நல்வாழ்வுக்காகத் தம்மால் முடிந்த பணிகளைச் செய்தார்கள். அது இஸ்லாமிய மக்களுக்காகச் செய்தார்கள் என்கிற அளவோடுதான்! ஆனால், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களல்லாத தமிழர்களுடைய அர்ப்பணிப்பில் இஸ்லாமிய மக்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அறப் போராட்ட நிலைமை எப்படி இருந்தது?
அக்கால அரசியல் சூழ்நிலைகளின்போது அறப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. அறப்போராட்டம் முழுமை பெறுவதற்கு அரும்பணி செய்தவரான தந்தை செல்வாவின் காலத்தில்தான் அதற்குச் சரியான தளம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அவர் போராட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு எடுத்தார் என்று கூற முடியாது. ஏனெனில், அவருடைய உடல் நிலை அப்படி இருந்தது. இருப்பினும் தந்தை செல்வாவின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால்தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வூட்டப்பட்டார்கள்.
தமிழினத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய இனவெறி பிடித்ததாகவே இலங்கையில் சிங்கள இனம் இருக்கிறது என்பதை தந்தை செல்வா சரியாக இனங்கண்டார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால், `இலங்கை முழுவதும் ஒரு தேசியம்' என்கிற எண்ணம் இருக்கக் கூடாது. அது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதனால் தமிழீழப் பகுதியில் எந்தக் காலத்திலுமே முழு இலங்கையும் ஒரு தேசம் என்று ஏற்றுக் கொள்கிற ஒரு அரசியல் கட்சி காலூன்ற முடியவில்லை. இலங்கை அரசியல்வாதிகள் `இலங்கை ஒரு தேசம்' (Srilanka is a nation) என்று சொல்கிறார்கள். ஆனால், தந்தை செல்வாவோ, `Srilanka is a Country Comprising of two nations' என்றார்.
அதாவது, இலங்கை இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை அவர் உறுதி செய்தார். இது தந்தை செல்வாவினாலான நல்லதோர் தொடக்கம். இத்தொடக்கத்தினாலேயே பின்னாளில் மிகப் பெரிய விடுதலைப் போரை ஆரம்பித்து, வளர்த்து, வெற்றி நோக்கிச் செல்ல முடிந்தது.
இவ்விரண்டு போராட்ட காலப் பதிவுகளும் இலங்கைப் படைப்புகளில் மிகச் சரியாகவும் தவறாமலும் இடம்பெற்றுள்ளனவா?
இதில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கொழும்பு வட்டம், தமிழீழ வட்டம் என்றிரு பிரிவுகள் எங்களுடைய இலக்கியங்களில் அறப்போராட்ட காலத்திலிருந்தே நிலையாக இருக்கின்றன. கொழும்பிலேயே வாழ வேண்டிய சூழல் இருந்ததால், ஆட்சியிலுள்ளவர்களைப் பகைக்காமல் கொழும்பு வட்ட இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. சிங்கள வெறியர்கள் வீடு புகுந்து ஆட்களை வெட்டிப் புதைக்கிற அக்காலத்தில் அவர்களுக்குப் பயந்தே இலக்கியம் செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் அறப்போராட்ட காலத்திலேயே இருந்தது.
இதனுடைய விளைவுதான்; கைலாசபதி போன்றவர்கள் (அவர்களைக் குறை சொல்வதாகக் கருத வேண்டாம்) சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து செயற்பட வேண்டியிருந்தது. அறப்போராட்டத்தை; அதை நடத்தியவர்களைச் சிங்களவர்களோடு இணைத்துக் கிண்டல் செய்த தமிழ்ப் படைப்பாளிகளும் கொழும்பில் இருந்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, தமிழீழத்திலிருந்து நாம் எம்மால் முடிந்ததை எழுதினோம். எம்முடைய அந்த எழுத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்கிற விமர்சனங்களும் கொழும்பிலிருந்து வந்து குவிந்தன. எமது இலக்கியம் வகுப்புவாத இலக்கியம் என்றார்கள்.
நாங்கள் பேசுவதெல்லாம் குறுகிய நோக்கம் கொண்டதென்று எழுதினார்கள். ஆனாலும், எம்முடைய கால்கள் மண் விடுதலையைத் தேடியே அடியெடுத்து வைக்கிறதென்று திடமாகப் புரிந்து கொண்டோம்.
எங்களுக்குச் சரியென்று பட்டவற்றையெல்லாம் தெளிவாகவே எடுத்து வைத்தோம். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் முன்பு எழுதியவைகளே விதைகளாகவும் வேர்களாகவும் இருந்தன. இதனுடைய வளர்ச்சியாகவே இன்று களத்தில் நின்றுகொண்டு இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களுடைய இந்தச் சுதந்திரம் இன்றும்கூட கொழும்பு சார்ந்த சூழலிலும் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் உள்ள படைப்பாளிகளுக்கு இல்லை. இவர்கள் அஞ்சி அஞ்சியே தமது கருத்தை முன்வைக்கிறார்கள்.
வெளிப்படையாகக் கூறினால், தமிழீழத்தின் களத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகிற இலக்கியங்கள் ஆற்றல் மிக்கவையாக வெளிவருகின்றன.
பலஸ்தீனம், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதெல்லாம் எப்படி களங்களிலிருந்து இலக்கியங்கள் உருவாகின்றனவோ அவ்வாறு தம்முடைய போர்க் களங்களிலிருந்தும் இலக்கியங்கள் பிறந்து கொண்டிருக்கின்றன.
இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலிலிருந்து மிகக் குறைவாகவும்; அச்சம் நிறைந்த கொழும்புச் சூழலிலிருந்து உண்மைகள் மறைக்கப்பட்டனவாகவும் வெளிவருகின்ற ஈழத்து இலக்கியப் படைப்புகளை நோக்குகையில்; தரமான படைப்புகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா?
இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டியிருக்கிறது. அண்மையில் நமது எஸ்.பொ.இங்கு தமிழகத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். `21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இலங்கையிலிருந்தே வெளிவரும்' என்றார். இதற்குப் பல எதிர்ப்புக் குரல்களும் இங்கு கிளம்பின.
உண்மையில், களத்தில் நின்றுகொண்டு அல்லது களத்தை நினைத்து வெறெங்கிலுமாவது இருந்து எழுதுகின்ற படைப்புகளில் சோர்வு தெரியாது. ஒரு தூய்மை இருக்கும். வேகம் இருக்கும். அதையெல்லாம் எம்முடைய படைப்புகளில் காண்கிறோம்.
இதற்கு மாறாக, ஆம் என்பதற்கான பதில் தான்; படைப்பாற்றல் மிக்கவர்களின் கொழும்பு வட்ட இலக்கியங்களும் படைப்புகளும்! இவை காத்திரத்தன்மை குறைந்தவை. உண்மைகள் மறைக்கப்பட்டவை. ஆனாலும் கூட, இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழீழ இலக்கியம் செழிப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.
`தமிழ்மொழி அழியாது' என்று அழகாக உச்சரிக்கிறார்களே தவிர; `அதை அழிய விடமாட்டோம்' என்பதற்கான சரியான முயற்சிகளில் இங்குள்ள கலைஞர்கள் என்கிற திரை உலகமோ, பெரும்பாலான இலக்கியர்களோ, ஊடகங்களோ இறங்கிச் செயற்படவில்லையே!
தமிழகத்தில் எனக்குச் சுமையாக இருக்கும் விடயம் இதுதான்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களெல்லாம் தமிழைப் படுகொலை செய்து வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். வழிகாட்ட வேண்டிய பலர் வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனாலும், இதை எதிர்த்து சில பேர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.
மருத்துவர் ராமதாஸ், தொல் திருமாவளவன், மருத்துவர் சேதுராமன் இவர்களோடு உலகமே போற்றுகிற நம்முடைய பழ.நெடுமாறன் எல்லோரும் இணைந்து ஒரு பெரிய தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி முன்நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்க் காப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்களிடம் இந்தத் தமிழ்க் காப்பை நேரடியாக எடுத்துச் செல்வதற்கு ஆட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பெருங்கட்சிகள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படி ஒரு முயற்சி இருக்கிறதா ஈடுபாடு இருக்கிறதா, அது குறித்த கவலை இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லையென்றே படுகிறது. அதுதான் கவலை. கல்வி மொழியாக தமிழ் மொழி ஆக வேண்டியது; தமிழ் மொழி குறித்த பெரிய கட்டாயமாகும். தமிழ்க் காப்புத் தேவையென்றால் தமிழ்நாட்டில், தமிழ் காலத்தாழ்வு இன்றி கல்வி மொழியாக வேண்டும். அதேபோன்று, ஆட்சிமொழியாக அது முழு அளவில் செயற்படவும் வேண்டும்.
நன்றி தினக்குரல் -பேட்டி அடுத்தவாரமும் தொடரும்-
|
|
|
|