|
மீண்டும் ஒரு சமாதானகாலம்?
|
இன்று தமிழீழ நடைமுறை அரசின் தலைநகரில் நடைபெற்ற முக்கியத்துவமான சந்திப்புக்களை தொடர்ந்து, அடுத்த மாதம் சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் சுவிஸ்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு இணங்கியுள்ளனர். சிறிலங்கா அரசு தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவானதாக காட்டிக்கொண்டு விடுதலைப்புலிகளை எப்படியாவது ஐரோப்பாவில் தடைசெய்வதற்கான சதியை அரங்கேற்றிக்கொண்டிருந்தது. அதனை உணர்ந்துகொண்ட புலிகள் நோர்வேயில் தான் பேசவேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். தற்போது நோர்வே அரசின் சிபார்சுக்கு அமைய இரண்டு தரப்புகளும் அமைதி சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக சுவிசில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.
ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் இடம்பெபயர்ந்த நிலையில், தமிழ்நாடு நோக்கியும் அகதிகளாக மக்கள் இடம்பெயரும் நிலையிலும் மீண்டும் சமாதானத்துக்கான நம்பிக்கை ஒளி தென்படுவது ஆறுதல் அளிக்கிறது.
இன்றைய சந்திப்பின்போது அரச படைகளினினாலும் அதன் ஆதரவு துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விடுதலைப்புலிகளின் தலைவரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் மீது நடாத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்களையும், இலங்கைத்தீவின் எப்பகுதியிலேனும் தேடுதல் என்ற பெயரில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனவும் அப்போதுதான் பேச்சுவார்ததைகளில் பங்கேற்க முடியும் என தெளிவாக தெவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள் எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம் என இன்றைய சந்திப்பில் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறான உறுதிமொழியை அளிக்ககூடிய நிலையில் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார சனாதிபதி அவர்கள் இருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
படங்கள் உதவி சங்கதி
|
|
|
வன்னி நோக்கி
|
வன்னிக்கு அடுத்தவாரம் வருகைதரவுள்ள நோர்வே நாட்டு அமைச்சரும் சமாதான நடவடிக்கைகளுக்கான சிறப்புத்தூதுவரின் வருகை சமாதானம் நோக்கிய பயணத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் தொடர்ந்து பெருமளவான மக்கள் பாதுகாப்பு தேடி வன்னிப்பகுதிகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை 5000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழுமையாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்பு தேடி வன்னிக்கு செல்லும் மக்கள்
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினரின் உடனடி நடவடிக்கை குழுவின் செயற்பாடுகள்.
இடம்பெயரும் மக்களுக்கான உடனடி போக்குவரத்து ஒழுங்குகள்
தற்போதைய நெருக்கடிகால மனிதாபிமான பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த தமிழரிடம் அவசர வேண்டுகோள்
பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடமும் வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் மிக மோசமான இராணுவக் கெடுபிடிகள், கொலைகள், கைதுகள், தாக்குதல்கள், காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வன்னிக்கும் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே அவர்களுக்கு உதவுமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான தற்காலிக உறைவிடங்கள் அமைக்கவும் உணவுப் பொருட்கள் வழங்கவும் குடிநீர் விநியோகிக்கவும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் ஏனைய தேவைகளுக்காக பெருமளவு நிதிதேவைப்படுகிறது.
யாழ். குடாநாட்டிலிருந்து 3,325 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 14,500 பேர் வன்னிக்கும், திருகோணமலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் 900 குடும்பங்களைச் சேர்ந்த 3,700 க்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளதால் தற்போதைய இராணுவ நெருக்கடிகளிலிருந்து தப்பி வந்த மக்களுக்கு உதவுவதற்குப் போதியளவு நிதி இல்லாதிருப்பதாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இதனால், ஈழத்தில் பெரும் அவலங்களைச் சந்தித்து வரும் உடன்பிறப்புகளுக்கு உதவ முன்வருமாறு வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் புனர்வாழ்வுக் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் அரச சார்பற்ற நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு இந்த நிலைமைகளை விளக்கி உதவிகளைக் கோருமாறு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச சமூகமும் இதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறும் கோரி நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை கட்டுப்படுத்தவும், படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் தவறும் பட்த்தில் போராட்டத்தினை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேன் ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த புதன்கிழமை (18.01.06) எமது பிரதிநிதிகளை உங்கள் அமைச்ர்கள் சிலர் கிதம் அழைத்து தற்போதைய நிலைவரம் குறித்து பேசினீர்கள். எமது நிலை குறித்து நீங்கள் எம்மைச் சந்திப்பதற்கு கவனம் செலுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, உங்கள் முன் சில விடயங்களை முன்வைத்தோம்.
அவையாவன:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் கொலை செய்யப்பட்டமை.
பிரபல ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் மற்றும் இளையதம்பி தர்சினி எனும் தமிழ்ப் பெண் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு பிரதேத்தில் கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. இது நீங்கள் அரச தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த சம்பவம்.
இந்தக் கொடூரமான வன்முறைச சம்பவங்கள் மீது அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கத் தவறியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதும் மிகவும் அப்பட்டமான உண்மை.
அத்தோடு இவை மட்டுமல்லாது அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் கலந்து கொள்ளும் வேளையில் தேவாலயத்திற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டமை.
இக்கொலையானது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு அரசாங்கப் படைத்தரப்பினர் சிலரின் துணையோடே நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுத்து இதுவரை எவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுமில்லை.
திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை. இது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற உச்கட்ட அராஜகமாகும். இந்த இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணைகள் புலப்படுத்தியுள்ளன. இக்கொலைகள் இடம்பெற்று இரு வாரங்கள் ஆகியும் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.
கடந்த திங்கட்கிழமை (16.01.06) அரச கட்டுப்பாட்டுப் பிரதேமான யாழ். மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து செற்படும் துப்பாக்கிக் குழுக்களாலும் சுடப்பட்டு மூவர் மரணமானதும் இருவர் படுகாயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
மன்னாரில் கடந்த வருடம் டிம்பர் 23 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள், மகன் என நான்கு பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டும் உள்ளனர்.
இராணுவத்தினரால் தமிழ் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
தமிழ் மக்கள் மீதான கொலைகளும் வன்முறைகளும் மற்றும் குறிப்பாக கொழும்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களை இரவு உடுப்புக்களுடன் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும், புகைப்படங்கள் எடுப்பதும் போன்ற பற்பல அராஜகமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன.
இவை அனைத்திற்கும் நீங்கள் கடந்த புதன்கிழமை எமக்கு உறுதியளித்தபடி தகுந்த விசாரணைகளும் தகுந்த நடவடிக்கைகளும் எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.
யாழ். மாவட்டத்தில் 42 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கில் 50 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடந்துள்ள நிலைமை இது.
வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் குடிமக்கள் மீது நிலவும் பயங்கர சூழ்நிலை அகற்றப்பட்டு அவர்களும் இந்நாட்டு மக்களாக சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் புதினம் தினக்குரல்
|
|
|
|