|
ஈழப்போரும் ஆட்லறியும்
|
இன்று இலங்கைத் தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்லறி தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவ இயந்திரத்திற்கு பலத்த அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.
இன்று தமிழீழத்தின் அனைத்து பிரதேசங்களும் விடுதலைப்புலிகளின் ஆட்லறி தூரவீச்சுக்குள்ளேயே வந்துவிட்டது. இதனால் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் எத்தகைய நெருக்கடிகளை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தற்போது விடுதலைப்புலிகளின் அதிகரித்த ஆட்லறி வலுவானது ஒரே நேரத்தில் கிழக்கே திருகோணமலைத் துறைமுகத்தையும் வடக்கே பலாலி விமான தளத்தையும் உக்கிரமாக தாக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பதும் அதன்காரணமாக சிறிலங்கா படையினரின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளன.
1990 ஆண்டில் விடுதலைப்புலிகளால் ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டபோது அதனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்பதில் சிறிலங்கா இராணுவம் போராடியது. அதற்கு பிரதான காரணம் ஆனையிறவில் அப்போது இருந்த இரண்டு ஆட்லறிகள் விடுதலைப் புலிகளுக்கு போய்விடக்கூடாது என்பதே.
 அதேபோல 1995 ஆண்டில் விடுதலைப்புலிகளால் நீண்ட தூர மோட்டார் பீரங்கியால் பலாலி விமான தளம் தாக்கப்பட்ட போது சிறிலங்கா இராணுவ தலைமை நெருக்கடிக்குள்ளானது. பலாலி விமான தளத்தை எப்படியாவது விடுதலைப்புலிகளின் சூட்டு வீச்சுக்குள் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் அதேயளவு தூரத்துக்கு புலிகளை பின்னகர்த்த வேண்டும் என கருதியது. அவ்வாறு ஒரு நடவடிக்கையை செய்ததன் மூலம் பலாலி விமானதளம் தன்னை தக்கவைத்துக்கொண்டது.
ஆனால் விடுதலைப்புலிகளால் நீண்ட தூரவீச்சு ஆட்லறிகள் 1996 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்படுத்த தொடங்கியபோது சிறிலங்கா இராணுவத்துக்கு நெருக்கடி சூழ தொடங்கியது. ஆனாலும் அக்காலப் பகுதியில் பலாலி தளம் மீது ஆட்லறிகள் மூலம் முற்றுகையை ஏற்படுத்த கூடிய அளவுக்கு புலிகளின் ஆட்லறி படையணி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதனால் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது பலாலி தளத்தின் மீதான அதிகரித்த தாக்குதல்களால் படையினரின் நாளாந்த விமான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிறிலங்கா படையினரின் பிரதான விநியோக மையமாக செயற்பட்டு வந்த திருகோணமலை துறைமுகப் பகுதி முதல் தடவையாக விடுதலைப்புலிகளின் ஆட்லறி தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
பலாலி விமான தளம் மீதான தாக்குதல்கள் புலிகளின் பூநகரி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் திருகோணமலை துறைமுகம் மீதான தாக்குதல்கள் சம்பூர் ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு கூறுகிறது.
அதேவேளை, கடல்வழியாக துருப்புக்களை ஏற்றிச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களை சிறிலங்கா இராணுவம் மறந்திருக்க மாட்டாது. 700 இற்கும் மேற்பட்ட படையினரை ஏற்றிச்சென்ற சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள் கடும்பிரயத்தனங்களின் மத்தியில் இரண்டு தடவைகள் எப்படியோ தப்பியிருக்கிறது.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கான உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லுகின்ற கப்பல் ஒன்று விடுதலைப்புலிகளின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
 தரைவழி தொடர்புகள் எதுவுமின்றி, யாழ்ப்பாணத்தில் 40000 படையினரை நிலைநிறுத்தியவாறு கடல் மற்றும் வான் வழி போக்குவரத்துக்கள் கேள்விக்குள்ளான நிலையில் தமது படைநிலைகளை பேணுவது என்பது இலகுவானதல்ல.
தற்போது சிறிலங்கா படைதரப்புக்கு பலாலி விமானதளத்தை மட்டும் அல்ல திருகோணமலை துறைமுகத்தையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். ஆனால் விடுதலைப்புலிகளும் நீண்ட கால போரிற்கு தயாராகி விட்டது போலவே களநிலைமைகள் காணப்படுவதால், அதற்கான சாத்தியங்களை இனிமேல் எதிர்பார்க்கமுடியாது.
அத்தோடு தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் கவனித்தால் எப்போதுமே அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆபத்தான நிலையே காணப்படுகிறது. கிளைமோர் தாக்குதலும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடுகளும் படையினருக்கு எப்போதும் இல்லாத அழிவையே கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலைகளின் பின்னனியில், சிறிலங்கா அரசானது தனது படைவலு எதிர்நோக்கியுள்ள அபாயத்தை உணர தொடங்கியிருக்கலாம். அதன்காரணமாக சிறிலங்கா இராணுவத்தினர் தாமாகவே யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
படங்கள்: தமிழ்நாதம்
|
|
|
|
4 Comments:
By
Anonymous, at Sunday, August 20, 2006 6:23:00 PM
அதற்கான இணைப்பு
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
By
thamillvaanan, at Monday, August 21, 2006 9:02:00 AM
By
அருண்மொழி, at Monday, August 21, 2006 12:40:00 PM
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆயுத பலம் அதிகரிக்கின்றபோது நிலப்பிரப்புக்களை கைப்பற்றவேண்டியதில்லை. அவை தானாகவே விடுவிக்கப்படும் என்ற போரியல் விதிக்கு சாட்சியாக காட்சிகள் அரங்கேறும் என நம்புகிறேன்.
By
thamillvaanan, at Wednesday, August 23, 2006 3:39:00 PM
Post a Comment
<< Home