நேற்றையதினம் தமிழீழக் கடற்பரப்பில் பெருமெடுப்பிலான கடற்சண்டை இடம்பெற்றிருக்கிறது. சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பாக சென்ற கடற்கலங்கள் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. சுமார் 700 இராணுவத்தினரை சுமந்து சென்ற கப்பல் தாக்குதலிலிருந்து தப்பியிருக்கிறது. ஆனாலும் இரண்டு சிறிலங்கா டோரா படகுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த இருபதுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காலமும் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையா? இது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. சுமார் இருபதுக்கு மேற்பட்ட சண்டைப்படகுகளில் வந்த கடற்புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். திருகோணமலையில் சிறிலங்கா படைகளால் விமான தாக்குதல் நடாத்தப்பட்டபோது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை எனவும் - இருபதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தபோதும் – பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும், இவ்வாறான தாக்குதல்களின்போது இவ்வாறான உயிரிழப்புக்கள் இயல்பானதுதான் எனவும் வக்காலத்து வாங்கிய கண்காணிப்புக்குழு என்ன சொல்கிறது? விடுதலைப்புலிகள் கடலில் செயற்படுவதற்கான உரிமை இல்லை எனவும் அவ்வாறான முழு உரிமையும் சிறிலங்கா அரசுக்கே உள்ளதெனவும் கூறியுள்ளது. ஆனால் நேற்றுக்கடலில் நடந்த கதை என்னவென்பதை தூரநோக்குடன் சிந்தித்தால் சமாதான வழியில் தீர்வு காணலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நேற்றைய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட படகுகளில் ஒன்று விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக 700 படையினரை கொண்ட துருப்புக்காவி இந்திய கடற்பகுதிக்குள் சென்றதை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார். விடுதலைப்புலிகள் கடலில் பயணம் செய்யமுடியாது என சொல்லும் சிறிலங்கா படைகள் அதே கடலில் அவர்களுடைய தாக்குதலில் இருந்து தப்பியோடி இந்திய கடலுக்கு சென்று மீண்டும் இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்திருக்கிறது. இந்தியக்கடல் எல்லைக்குள் நின்றுகொண்டு தமதுநாட்டின் இறைமை என்றும் தமது கடல் என்றும் இப்போதும் அலட்டுவதற்கு தயாராக சிங்களம் இருக்கிறது.
|