|
இது வைகோவின் குரல் - 2
|
இதுவும் வைகோவின் குரல்தான். தயவுசெய்து இதனை விவாதபொருளாக்க வேண்டாம்.
ஐ.நா. சபையிலே புதிய, புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக கூறுகிறார்.
சென்னையில் நேற்று(29/12/2005) வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசியோர் உரை: தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய உரை:
1939 ஆம் ஆண்டு திராவிடர் கழகமானது தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்த காலகட்டத்தில் 11.8.1933 ஆம் நாளில் "விடுதலை" நாளிதழில் ஈழத் தமிழர் இன்னல் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானனது. 10.8.1939-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஈரோட்டில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம், இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாக நடத்துகிறது. அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தவும் அந்த அரசு முயற்சிப்பதை இக்கமிட்டி கண்டிக்கிறது. இலங்கைத் தமிழர் உண்மை நிலையை அறிய ஈ.வெ.ரா, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட குழு இலங்கை சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
நோர்வே நாட்டின் முயற்சிகளால் ஈழத்திலே சமாதானம் ஏற்பட்டது. தங்களுக்குப் பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்கப் போகிறது என்று தமிழர்கள் நிம்மதியாக இருந்த நிலையில், வேட்டுச் சப்தம் கேட்காமல் இருக்கிறதே என்று இருந்த நிம்மதியாக இருந்த நிலைமைக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பசுத்தோல் போர்த்திய புலியாக தங்களுக்கு எப்போதெல்லாம் சங்கடம் வருகிறதோ எப்போதெல்லாம் தங்களது நடவடிக்கைகளை உச்சநிலைக்குக் கொண்டுபோகிறார்களோ அப்போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் டில்லிக்கு வந்துவிடுகிறார்கள். டில்லியிலே பேசிவிட்டு இந்தியா எங்களுக்குச் சார்பாக இருப்பதாக பல வல்லரசுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் போய்ச் சொல்லுவார்கள்.
ஈழத் தமிழர்களைச் சாகடிக்க வேண்டும் என்று சொல்லுகிறபோது மற்ற தமிழர்கள் அதைப் பார்த்து கல்லாகி இருக்க வேண்டுமா? ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். நாட்டால் வேறுபட்டு இருக்கலாம். வீட்டால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். யாருக்கெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகிறதோ, யாரெல்லாம் தமிழன் என்று சொல்லுகிறார்களோ அவர்கள் தமிழ் அபிமானத்தோடு ஈழத் தமிழர்களைப் பார்க்க வேண்டாமா? காலிலே அடிபட்டால் தலையிலே வலிக்க வேண்டாமா? ஈழத் தமிழருக்கு எதிரான கொடுமைகள் தொடரக் கூடாது. இந்தியாவிலே இதுவரை இல்லாத நல்ல அரசு அமைந்துள்ளது. அந்த இந்திய அரசை வலியுறுத்துகிற தீர்மானம் இங்கே முன்மொழியப்படுகிறது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த உடனே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் சேர்க்கிறார்கள் என்று பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன. ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்றால், அந்த ஈழத் தமிழர்கள் யாரை நம்பி வாழ்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதைவிட ஏமாற்றுக்கொள்கை எதுவும் இருக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக இலங்கை அரசு யாரை அழைத்துப் பேசுகிறதோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதைவிட பொறுப்பற்ற தனம் எதுவும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகளை இனிமேல் நாம் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் (பலத்த கைதட்டல்). 30 மைல் கல் தொலைவிலே உள்ள என் சகோதரன் இனப்படுகொலைக்கு ஆளாகிறபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மைவிட சோற்றாலடித்த பிண்டங்கள் யாரும் இல்லை என்றார் கி.வீரமணி.
அண்மைக்கால இலங்கை அரசியல் நிலைமைகளின் பின்புலத்தை, முக்கிய நிகழ்வுகளை சமாதானப் பேச்சுகள், சிறிலங்கா அரச தலைவர் தேர்தல், ஈழத் தமிழர்கள் மீதான இராணுவ வன்முறைகள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வரை நீண்ட அரசியல் தகவல்களை இலங்கை அரசியல் நிலைமைகளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கி.வீரமணி பட்டியலிட்டும் விளக்கிப் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்:
இலங்கை அதிபர் இந்தியாவில் இருக்கிற சூழலில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அரங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல 6.24 கோடி தமிழகத் தமிழர்கள் மட்டுமில்லாமல் துணைக்கண்டத்துக்கு அப்பால் உள்ள தமிழர்களும் வழிமொழிவார்கள். ஈழத் தமிழர்களுக்காக இங்கே அழுதால் பழ. நெடுமாறனையும், வைகோவையும் சிறைபிடித்தார்கள். உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இனப்பிரச்சனைக்கு எல்லோரும் குரல் கொடுக்கின்ற நிலையில் 50 ஆண்டுகாலத்துக்கு மேலாக நீடிக்கிற இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக ஏன் உலகெங்கும் வாழுகிற நாடுகள் குரல் கொடுக்கவில்லை? இது தமிழர் பிரச்சனை என்பதால் யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதனால் தமிழர்களாகிய நாம் வேதனைப்படுகிறோம். நோர்வே சமாதான பேச்சுவார்த்தை நடக்க இந்திய அரசு துணைநிற்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை கண்காணிக்கும் நிலையை இந்திய அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். இதை எந்த நிலையிலும் சொல்வோம். இது பற்றி பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளேன்.
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நாம் என்றும் துணையாக இருக்க வேண்டும். அவர்கள் நமது தொப்புள்கொடி உறவு என்பதால்தான் துணையாக இருக்க வேண்டும். 6.24 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்களுக்காக ஒற்றுமையாக இருக்கிறோம்; ஒன்றாக இருக்கிறோம் என்பதை எப்போதும் வெளிப்படுத்துவோம்.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:
தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத முரசுகொட்டும் திருநாள் இது. ஆர்ப்பரிக்கும் ஆவேச உணர்ச்சிகளோடு இந்த மண்டபத்துக்குள்ளும் வெளியேயும் தன்மானத் தமிழர்களாய் திரண்டுள்ளீர்கள். சரித்திர பிரசித்திப் பெற்ற பிரகடனம் இங்கே நிறைவேற்றப்பட்டபோது நீங்கள் எழுப்பிய கரவொலி அடங்கிட பலமணி நேரம் ஆயிற்று. இந்த ஒலி அலைகடலின் பேரிரைச்சலைப் போல தமிழ்மக்களின் இதய ஒலியாக எழுந்து நிற்கிறது.
பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியாளர்களும் மத்திய மாநில உளவுத்துறையினரும் சுருக்கெழுத்தாளர்களும் எந்தக்காலத்திலும் இல்லாத அளவில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னால் இங்கே கூடியிருக்கிறார்கள்.
டிசம்பர் 17 ஆம் நாள் இளையதம்பி தர்சினி என்ற 19 வயது தமிழ் நங்கை இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொன்றுவிட்டு, கிணற்றிலே போட்டால் மிதந்துவிடும் என்பதால் கல்லைக் கட்டி கிணற்றிலே போட்டார்கள். உலகத்திலே எங்குமே நடக்காத இத்தகைய அக்கிரமங்களை இலங்கை இராணுவத்தினர் கடந்த காலங்களிலும் செய்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.
நான் ஜெனீவாவாவில் மனித உரிமைகள் ஆணையத்திடம் நான் ஈழத் தமிழர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனு கொடுத்த போதும் இதே கொடுமை கிருசாந்தி என்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பின்னர் இலங்கை கடற்படையினர் செய்த அக்கிரமத்தை அருமைச் சகோதரிகள் உள்ள இந்த மண்டபத்திலே என்னால் சொல்ல முடியாது. அத்தகைய கொடுமை அது.
மானத்தையும் வீரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கிற கூட்டம்தான் ஈழத் தமிழகத்திலே உள்ளார்கள். இந்த விடயங்களை அவர்கள் எளிதிலே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஈழத்திலே இப்படிப்பட்ட ஆயுதப் போராட்டம் வருவதற்கே இத்தகைய வன்முறைகள்தான் அடிப்படை. இளையதம்பி தர்சினிக்கு நேர்ந்த கொடூரத்தால் மக்கள் கொந்தளித்தார்கள். மக்களைத் தொடர்ந்து மாணவர்கள் கொந்தளித்தார்கள். நியாயம் கேட்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகன்தாஸ் தலைமையிலே அமைதி ஊர்வலம் நடத்தப்பட்ட போது இராணுவம் தடுத்து நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி, துணைவேந்தரை, பேராசிரியரை, மாணவர்களைத் தாக்கியது. 20 ஆம் திகதியன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 10 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவம் உள்ளே நுழைந்தது.
(இலங்கை விடுதலைக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களையும் ஒப்பந்தங்களுக்கு நேர்ந்த அவலங்களையும் வைகோ விவரித்தார்.)
வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தமிழீழத் தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை பாராளுமன்றத்திலே அதைக் கொண்டுவந்தார். இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கிறவன் சொல்கிறான். இலங்கைத் தீவிலே தமிழீழம் அமைய வேண்டும் என்று சொல்பவர்களைப் பிரிவினைவாதிகள் என்று சொல்லுகிற மேதாவிகளைப் பார்த்துக் கேட்கிறேன்.
1999 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து செல்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது இதை நீங்கள் ஏன் சொல்லவில்லை. ஒரு நாட்டினது இறையாண்மையைத் தீர்மானிப்பது யார்? அந்நாட்டு மக்கள். இறையாண்மை, ஒருமைப்பாடு என்பது என்ன? அங்கே தமிழீழத் தனிநாடு வந்தால் இங்கே தனித் தமிழ்நாடு வந்துவிடும் என்று பேசுகிறார்கள்.
தனிநாடு அமைவது தொடர்பான கருத்துக்களைப் பேசுவதற்கு நீங்கள் யார்? உலகத்துக்கு நாட்டமைகளா? அப்படியானால் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை பிரித்து உலக வரைபடத்திலே வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுக்க இந்திய இராணுவம் சென்றதே... அப்போது எங்கே போனீர்கள்? வாருங்கள்...வாதாடா வாருங்கள். எங்கள் பக்கம் நியாயமிருக்கிறது. ஆயுதப் போராட்டம் ஏன் வந்தது அங்கே? யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கபட்டது. நடு வீதிகளிலே தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் மாமிசம் கிடைக்கும் என்று தொங்கவிட்டார்களே...அதனால்தானே தங்களைப் பாதுகாக்க ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள். அதேகாலகட்டத்தில் அமெரிக்காவில் 1981 மாசாசூட்டெஸ் மாகாணத்திலே ஈழத்தை ஆதரித்து ஈழத் திருநாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஒப்பந்தம் போடுகிற போதெல்லாம் நயவஞ்சகமாக அதை கிழித்தெறிகிறவர்கள் சிங்களவர்கள்.
1983-ல் வெலிக்கடைச் சிறையில் கோரமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தமிழகமே கொதித்தெழுந்தது. ஈழத்திலே இனப்படுகொலை நடக்கிறது என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. அன்று நாடாளுமன்றத்திலே இந்திரா காந்தி அம்மையாரும் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், அந்தத் தீவின் பூர்வகுடித் தமிழ் மக்கள் என்றார் இந்திரா காந்தி அம்மையார்.
மகிந்த ராஜபக்ச அதிரபாகத் தேர்ந்தெடுக்கப்படவுடன் அடிப்படை சுயாட்சி உரிமையை நிராகரித்து, தமிழர் தாயகமே இல்லை என்றவர். தமிழனின் பூர்வீகப் பகுதிகளில் இருந்து சிங்களக் குடியேற்றங்களை அகற்றக் கோரிதானே உண்ணாவிரமிருந்து நினைவு திரும்பாமலேயே திலீபன் மறைந்து போனாரே.
அன்று ஜெயவர்த்தன நயவஞ்சகமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இன்று மகிந்த ராஜபக்ச ஒப்பந்தம் போட்டுக்கொள்ளச் சொல்லுகிறார். தமிழர்களின் அவலத்தை அகிலத்துக்குச் சொல்ல ஆராய்ச்சி மணி அடித்தது நோர்வே நாடுதானே. அவர்கள்தானே இத்தனை ஆண்டுகாலம் குரல் கொடுத்தார்கள். இரு சிறுநீரகங்களும் செயலிழந்துபோன பாலசிங்கத்தைக் காப்பாற்றியது நோர்வே. அவர்களுக்குத் தமிழர்கள் நன்றி கடன்பட்டவர்கள்.
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை மீறுவதாகச் சொல்கிறார்கள். போர் நிறுத்தத்தை முதலிலே அறிவித்தது யார்? விடுதலைப் புலிகள்தானே. 2000 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தனர். சிங்கள இராணுவத்தோடு இனி சண்டைபோட முடியாது என்றா அறிவித்தார்கள். இல்லை...நாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று ஆனையிறவிலே நிரூபித்துவிட்டு.. உலக யுத்த சரித்திரத்திலே மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள்.. ஆம் பொதுமக்கள் ஒருவருக்குக் கூட எதுவித ஆபத்தும் ஏற்படாமல் 27 விமானங்களை கட்டுநாயக்கவிலே சுட்டுவீழ்த்திவிட்டு நாங்கள் பலமானவர்கள்- போரினால் வெல்லமுடியாதவர்கள் என்று காட்டிவிட்டு போர் நிறுத்தம் செய்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்ததா? போர் நிறுத்தத்தை தொடர்ந்து நீட்டித்த பிறகே கடைசி நேரத்தில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. இந்த போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளால் கொண்டுவரப்பட்டது. சர்வதேச சமூகத்தின் முன்பாக குற்றவாளிக் கூண்டிலே நிற்க வேண்டிய நிலையிலே போர் நிறுத்ததிலே சிறிலங்கா அரசு கையெழுத்திட்டது.
அதன் பின்னர் பேச்சுவர்த்தைகள் நடத்தப்பட்டன. தாய்லாந்திலே விடுதலைப் புலிகளின் பிரதிநிதி அருமைச் சகோதரர் அன்டன் பாலசிங்கத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார்கள் என்ற செய்தியை ஐ.பி.சி.வானொலி மூலமாக சிறைக்குள் இருந்து கேட்டேன். தாய்லாந்து அதிபர் நம்முடைய பாலசிங்கத்தை யுவர் எக்செலன்சி என்று அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார். இதை நான் வானொலியில் கேட்டபோது எனக்கு எப்படி இருந்திருக்கும்?
தமிழர்கள் புனர்வாழ்வுக்காக, மறுசீரமைப்புக்கும் 4 பில்லியன் டாலரை சர்வதேச சமூகம் அளிக்க முன்வந்தது. முதல் கட்டமாக 18 ஆயிரம் கோடி ரூபாயில் ரூ 380 கோடியை ஒரே கட்டமாக அளித்தார்கள். இந்தப் புனர்வாழ்வுப் பணிகளை இடைக்கால நிர்வாக அரசு இல்லாமல் எப்படி மேற்கொள்ள முடியும்?
ஏற்கெனவே தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள். உலக நாட்டிலே எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான நிர்வாகம் ஈழத்திலே நடைபெறுகிறது. நல்ல அரசு நடத்த வேண்டுமானால் அங்கு போய் பாடம் கற்றுக்கொண்டு வரலாம். அந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து சுமூகத் தீர்வைக் கலைத்தது யார்? சிங்களவர்கள்தானே. அப்போது விடுதலைப் புலிகள் வன்முறைகள் ஈடுபடுவதாக இங்கே சொல்லுகிற பத்திரிகையாளர்களைப் பார்த்து கேட்கிறேன்...தமிழ்நெட் இணையத் தளத்தை தன் நுண்மான் நுழைபுலத்தால் நடத்திய தர்மரெட்ணம் சிவராம் என்கிற தராக்கியைச் சுட்டுக்கொன்றார்களே.. நடு றோட்டில் இழுத்துப் போட்டுச் சுட்டுக்கொன்றார்களே உலகம் ஏன் வாய் திறக்கவில்லை? பத்திரிகையாளர்களான ஜயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன் இவர்களெல்லாம் தமிழர்களை ஆதரித்தற்காக சுட்டுகொல்லப்பட்டார்களே? இந்தப் படுகொலைகள் எல்லாம் போர் நிறுத்தம் அறிவித்த பிறகுதானே நடந்தது? விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் சங்கர், கௌசல்யன் என பலரும் சுட்டுக்கொல்லப்பட்டார்களே?
சிட்டுக்குருவிகளைப் போல் விடுதலைப் புலிகளிடம் சிறிய விமானங்கள் இருப்பது இந்தியாவுக்கு ஆபத்தாம். நீங்கள் கொடுக்கப் போகிற ராடார்கள் யாரை கண்காணிக்க? நீங்கள் கொடுக்கிற ஆயுதங்களை வைத்துக் கொண்டு யாருடன் அவர்கள் சண்டைக்குப் போகிறார்கள் சிங்களவர்கள்? சீனாக்காரன், பாகிஸ்தான் ஆயுதங்களைத் தருவதால் நீங்கள் ஆயுதம் தருவதாகச் சொல்கிறீர்களே? சீனாக்காரனும் பாகிஸ்தானியக்காரனுமா அங்கே வாழ்கிறான்? எங்கள் தமிழர்கள் அல்லவா வாழ்கிறார்கள்.
சிங்கள இராணுவத்துக்காக ராடார்களைக் கொடுக்கிறீர்களே...அந்த இராணுவத்தைக் கொண்டு எங்கள் தமிழர்கள் கொல்லப்படுகிறபோது அந்தத் தமிழர்களுக்கு நீங்கள் பாதுகாப்பளிக்க வேண்டாமா? இந்திய-இலங்கை இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பிரதமர் மன்மோகன்சிங்குடன் நான் பலமுறை நேரில் சந்தித்து மனுக்கொடுத்து இருக்கிறேன்.
சிங்கள அரசுக்கு உதவக் கூடாது என்று பலமுறை நாம் வலியுறுத்தினோம். அதையும் மீறி செய்திகள் வந்தபோதெல்லாம் நான் மன்மோகன்சிங்கை வலியுறுத்தினேன் (மன்மோகன்சிங்குடனான சந்திப்பையும் சந்திப்பில் கையளிக்கப்பட்டு மனுக்களையும் விரிவாக வைகோ விளக்கினார்). இவ்வளவு நிலைமைகளுக்குப் பிறகும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும் என்று சிங்களவர் சொல்கிற போது நோர்வேதான் உதவ வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.
இந்தியாவை சிங்களவர்கள் முன்னிறுத்துக் காட்டுவதே தங்களுக்கு இந்தியா சார்பாக இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ளத்தான். அங்கே போர் மூளக்கூடாது என்றுதான் நாம் விரும்புகிறோம். அங்கே விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. அங்கே உள்ள தமிழன் நாதியற்றுப் போகவில்லை. நாயகம் முழுமையும் உள்ள தமிழன் உள்ளார். ஈழத்திலே உள்ள தமிழர்கள் வதைக்கப்பட்டால் தமிழர்களை ஒடுக்கிவிடலாம் என்று சிங்களவர்கள் எண்ணிவிடுவார்களேயானால்..நயவஞ்சகமாக இந்தியாவை தந்திரமாக தக்க வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினால் அது ஒருக்காலும் நடக்காது.
இந்த உணர்வு தமிழ்நாட்டிலே நீறுபூத்த நெருப்பாக உள்ளது. கருத்துக் கணிப்பு எடுக்கிறார்கள்..ஈழத் தமிழர் ஆதரவு பற்றி..ஆனையிறவுப் போரிலே வெற்றிபெற்ற போது கருத்துக் கணிப்பு எடுத்திருந்தால் 90 வீதமான மக்கள் வாழ்த்துச் சொல்லி இருப்பார்கள். இனத்துக்காரன், சகோதரன் களத்திலே நிற்கிற போது ஆதரவாகத்தானே வரும். சிங்கள அரசின் வஞ்சக வலையில் இந்திய அரசு ஒருபோதும் விழாது என்று நம்புகிறோம். தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவிடலாம் என்று எண்ணினால் நாம் அனுமதிக்கமாட்டோம். ஈழத் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம். அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும்போதே சாவை சந்திப்பது என்று தீர்மானிக்கிற தீரர்கள். மரணத்தை தங்கள் கழுத்திலே மாலைகளாகத் தொங்கவிட்டுள்ளார். மண்ணின் மானம் காக்க வீரர்களும் வீராங்கணைகளும் தங்களையே அர்ப்பணித்துள்ளார்கள்.
மொத்தத் தமிழர்களும் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தார்களா? ஒரு சதவீதத்துக்கு மேல் வாக்குகள் விழவில்லையே.. இங்குள்ள தமிழர்கள் உணர்வும் அதுதான். எங்கள் கடமையைச் செய்வோம். இலங்கைக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யக் கூடாது. ஆயுதங்களை, ராடார்களை கொடுக்காதீர். பலாலி விமான தளத்தை பழுதுபார்த்து தராதீர்கள். கொடுத்தால் என்ன ஆயிற்று? யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். இங்கே இருக்கிற இளைஞர்கள் வைகோவைப் போல் அமைதியாக இருக்கிறவர்கள் அல்ல என்று எச்சரிக்கிறேன்.
இதனால் ஏற்படக் கூடிய உணர்வு.... இங்கே கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது மக்கள் போர்க் குழு என்ற அமைப்பு. இந்த இளைஞர்களின் இதயத்தில் பெற்றோலை ஊற்றி எரியூட்டாதீர்கள். தங்கள் இனத்துக்கு ஏற்படும் அநீதி கண்டு அவர்கள் கொதித்தால் மக்கள் போர்க்குழுக்கள் இங்கே உருவாகிவிடக் கூடும். நான் வன்முறையாளன் அல்ல. கொசாவோவுக்கு குரல் கொடுக்கிறீர்கள்...மதத்துக்காக குரல் கொடுக்கிறீர்கள். எங்கள் இனத்துக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
வன்முறை இங்கே வரக்கூடாது. அதை நீங்கள் விதைத்துவிடக் கூடாது. எதிர்காலத்திலே வன்முறை விதைகளை தூவிவிடாதீர்கள். தீவிரவாத உணர்வு வளர லட்சம் பேர் தேவையில்லை. ஆயிரம் பேர் போதுமே. எச்சரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்க மன்மோகன்சிங் அரசுக்கு முழு ஆதரவளிக்கிறோம். மதிக்கிறோம். தமிழர்களால் உருவாக்கப்பட்ட- 40 நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு தமிழினத்துக்கு கேடு செய்துவிடக் கூடாது என்பதற்காக இந்தத் தீர்மானத்தை முன்வைக்கிறோம். ஐ.நா. சபையிலே புதிய புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்றார் வைகோ.
இந்தப் பொதுக்கூட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகித்தார்.
தகவல் புதினம்
|
|
|
|