|
வாழ்க பல்லாண்டு!
|
இன்று தமிழீழ விடுதலைப்போராட்ட தலைவரின் பிறந்தநாள். அவரைப்பற்றி ஜே.டிக்ஸிற், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் இப்படி சொல்கிறார்: "ஈழத்தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவ வலிமையும் அதன் பிரதான பாத்திரமும் எவ்வாறு உருவானது. அதற்கான முதலாவது காரணி, பிரபாகரனின் தனிப்பட்ட பண்புகளும், அவரது தனித்திறமையும், உளப்பூர்வமாக ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்துக்கான முழுமையான அர்ப்பணிப்பும் ஆகும். பிரபாகரன் எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பிரபாகரன் தன்னகத்தே தீர்க்கதரிசனமும் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பதையும் அவர் இயற்கையாகவே இராணுவ தந்திரோபாய அறிவை கொண்டவராகவும் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது. தற்கால அரசியல்நிலைமைகளை கூர்ந்து மதிப்பிடுவதுடன் அதற்கேற்றவாறு சாமர்த்தியமாக செயற்படுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்".
தமிழீழ அரசை நோக்கிய பயணத்தில் அவரது வழிகாட்டல்கள் பற்றி என்மனத்தில் எழுந்த சில உணர்வலைகளை பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை கட்டியமைத்து அதனை தொடர்ச்சியாக கட்டுக்கோப்பாக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பேணிவருவது என்பது வியப்புக்குரியதே. அவரது இராணுவ புலமைகளுக்கு அப்பால் அவரின் ஒருபார்வை பற்றிய பகிர்வே இதுவாகும்.
இன்று தமிழீழகாவல்துறை என்ற பெயரில் தமது நிர்வாக நடைமுறை அரசுக்கான காவல்துறையை நிறுவி 15 ஆண்டுகள் ஆகின்றது என நம்புகிறேன். பிரபாகரன் இராணுவரீதியாக மட்டுமே சிந்திப்பவர் என இப்போதும் கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒருகணம் இது பற்றி சிந்தியுங்கள். இந்திய அல்லது சிறிலங்கா காவல்துறையின் சீருடையை எடுத்துபாருங்கள். ஈழத்தமிழர்கள் இரண்டு காவல்துறையை பற்றித்தான் அறிந்திருந்தார்கள். ஒன்று சிறிலங்கா காவல்துறை. மற்றயது இந்திய காவல்துறை, அதனை சினிமா படங்களில் பார்த்திருப்பார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தமிழீழத்துக்கு என தனியான காவல்துறை அமைக்கப்பட்டபோது தங்களுடைய காவல்துறையும் எப்படி இருக்கும் என எண்ணியிருப்பார்கள்?. அதே வகையான காக்கிச்சட்டையை போலத்தான் தமிழீழ காவல்துறையும் அணியும் என எதிர்பார்த்திருப்பார்கள்.
ஆனால் தலைவர் பிரபாகரன், எங்களுடைய மக்களுக்கு பொலிஸ் காக்கிச்சட்டைகளை பார்த்தாலே பயம் வரும். எமது மக்கள் சிறிலங்கா காவல்துறையின் கொடுமைகளை நன்கு அறிந்தவர்கள். அதனால்தான் எமது காவல்துறை மக்களுக்கு நண்பனாக அவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும். மக்களிடையே காவல்துறை என்றால் நம்பிக்கை வைக்ககூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் பயப்பீதியை உருவாக்கும் பச்சை காக்கிச்சட்டைக்கு பதிலாக நீல உடை சீருடைகளை நடைமுறைப்படுத்தியதாக கூறுகிறார். இராணுவ சிந்தனைகளிலே மட்டுமே அக்கறை கொள்ளும் ஒருவரால் இவ்வாறு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கொண்டு அதற்கேற்ப புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் பாங்கை காணமுடியுமா?
ஒரு தலைவன் என்பவன் நிகழ்கால யதார்த்தத்தை கவனத்தில் கொண்டு எதிர்காலநடைமுறைகளுக்கும் ஏற்றவாறு தலைமைதாங்கி வழிநடாத்துபவனாக இருக்கவேண்டும். அதேவேளை தன்னுடைய கொள்கையில் நேர்மையானவனாக இருக்கவேண்டும். அத்தகைய பண்புகளை ஒருங்கே கொண்டவராக பிரபாகரன் விளங்குகிறார்.
படஉதவி tamilnation.org
|
|
|
|