|
வெளித்தெரியா வெறுமைகள்
|
நான்கு வருட சமாதான காலத்தின் பெறுபேறு தந்த வெகுமதி என்ன? இதற்கான விடைக்கான ஒரேயொரு நல்ல குறியீடாக தற்போதுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை குறிப்பிடலாம். குறிப்பாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் மட்டும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். அரச சார்பற்ற அமைப்பொன்றால் நடாத்தப்பட்ட கணிப்பீடுகளின் படி, 18 பிரதேசங்களை கொண்ட ஏறத்தாழ 190 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில், படையினர் நிலைப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுஇருக்கிறார்கள். அவ்வமைப்பின் கணிப்பின்படி 30388 குடும்பங்கள் தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
(பச்சை நிறத்தால் உயர்வலய பாதுகாப்பு பகுதிகள் நிறந்தீட்டப்பட்டுள்ளன.)
இவ் உயர்பாதுகாப்பு வலயங்கள் சமாதான காலத்தின்போது தோற்றுவிக்கப்பட்டவையல்ல. ஆனால் நான்கு வருட சமாதான காலத்தின்போது கூட இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாவிட்டால் இது யாருடைய தவறு? குறிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயமானது 1990 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 15 வருடங்களாக அப்பகுதி மக்கள் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த சமாதான காலம் தந்த பரிசு என்ன?
ஒருவன் தான் பிறந்த மண்ணிலிருந்து, வளர்ந்த மண்ணிலிருந்து வாழ விடாமல் விரட்டியடிக்கப்படும்போது அதன் வலி அவனுக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் என்னவோ அவர்களது மறுக்கப்பட்ட உரிமைக்காக சர்வதேச சமூகங்கள் இன்னமும் கண்ணை மூடிக்கொண்டுஇருக்கின்றன.
தற்போது நடைமுறையில் இருக்கும் போர்நிறுத்த விதிமுறைகளின் படி மக்கள் வாழ்விடங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேறி இருக்கவேண்டும். ஆனால் அதனை செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. அதனை நியாயப்படுத்துவதுபோல உலகநாடுகளும் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு துரத்தியடிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையா?
நீண்டகால இராணுவ ஆக்கிரமிப்புக்கு பின்னர் ஆனையிறவு இயக்கச்சி வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பிரதேசங்களில் மீளக்குடியேறி இருக்கும் மக்கள் நம்பிக்கை ஒளியாய் தெரிகிறார்கள். அவர்கள் சென்றதுபோல் இவர்களும் செல்லவேண்டும்.
படங்கள் சமாதான செயலகம்
|
|
|
|