|
இது வைகோவின் குரல்
|
பலாலி சிறிலங்கா இராணுவ விமான தளத்தைச் சீரமைக்க இந்திய அரசாங்கம் உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில் கடந்த திங்கட்கிழமை பேராசிரியர் சு.ப. வீரபாண்டியனின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்" நூலை வெளியிட்டு வைகோ பேசியதாவது:
பழங்காலத்தில் இருந்தே ஈழத்தில் தமிழர்கள் தனி இனமாக வாழ்ந்ததற்கு சான்று உள்ளது. சிங்கள மொழி பிரதானப்படுத்தப்பட்டபோது தான் தனி ஈழப்பிரச்சினை எழுந்தது. தனி ஈழம் அமைப்பது தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.
இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாக இருந்தபோது அதற்கு எதிராக பிரதமர், சோனியா காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் பேசினேன். அதையடுத்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
இப்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை இந்தியா உதவியுடன் சீரமைத்து வருவதாக சிறிலங்கா விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். இந்திய அதிகாரிகள் விரைவில் பார்வையிட வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலாலி விமானதளத்தைப் பயன்படுத்தி தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கொன்றது. எனவே இந்த விமானதளம் சீரமைக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழர்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்கெனவே இந்தியா உதவி செய்துள்ளது. மீண்டும் இதுபோல இந்தியா அந்த நாட்டு இராணுவத்துக்கு உதவக்கூடாது.
இலங்கையிலே போர் மேகம் சூழ்ந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளியாகின்றன.
சிறிலங்காவுக்கு உதவி செய்யும் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கமாட்டார். ஆனால் ஒரு சில இந்திய அதிகாரிகள், சிறிலங்காவுக்கு உதவ தயாராக இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.
அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையும் வகையில் நான் சொல்வதை இங்கே உள்ள உளவுத்துறையினர் கவனமாகக் குறிப்பெடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிலங்காவுக்கு நீங்கள் உதவி செய்தால் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும். இதை அப்படியே அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையுமாறு குறிப்பெடுத்து அனுப்புங்கள்.
இந்தியா என்பது நாடு அல்ல உபகண்டம். இக்கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வந்தால் தேசிய இனத்தின் உரிமைக்காக போராட வேண்டிய சூழல் உருவாகும்.
மதத்தால் பாகிஸ்தானும், இனத்தால் அயர்லாந்தும், மொழியால் வங்காளதேசமும் பிரிந்தது. அப்படியொரு நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது.
இந்தக் கருத்து அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் வைகோ.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் புதினம்
|
|
|
|