|
சமாதானத்தின் எதிரிகள் யார்?
|
இன்று இலங்கை ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு காட்டூன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இன்றைய இலங்கை அரசியல் நிலையை எவ்வாறு ஒரு சாரார் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அது பிரதிபலிக்கிறது. விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை தவிர்த்துவருகிறார்கள் என்பது போன்ற தோற்றம் அது.
உண்மையில் விடுதலைப்புலிகள் தற்போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்துக்கொண்டுசெல்வதை விரும்பவில்லை. ஆனால் விரைவாக தீர்வை காணவேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடித்து, சமாதானத்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவித்து, தமிழ்ப்பற்றாளர்களை கொன்று, தமிழ்த்தேசியத்தின் உயிர்த்துடிப்பை இல்லாதொழிக்கவிரும்புகிறது சிங்கள அரசு.
துணைப்படைகளின் ஆயுதக்களைவை அடுத்தசுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிறைவேற்றுவதாக சிங்கள அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு மாறாக துணைப்படைகளின் செயற்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. தமிழ்த்தேசியபற்றாளர் விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ்ப்போராளிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், விடுதலைப்புலிகளின் பிராந்திய தளபதிகளின் பயணஒழுங்கு பிரச்சனைக்குரியதாக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் வன்னிபெருநிலப்பரப்பு, திருகோணமலையின் ஒரு பகுதி, மட்டக்களப்பு – அம்பாறை பிரதேசத்தின் குறிப்பிட்டளவான பகுதிகள் என்பன அடங்குகின்றன. ஆனால் அப்பகுதிகள் தரைப்பகுதியூடாக தொடர்பட்டவையாக இல்லை. அவ் இடைப்பட்ட பகுதிகள் சிங்கள அரச ஆளுகைக்குள் இருக்கின்றன. தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையின் படி விடுதலைப்புலிகளால் அப்பபகுதிகளுக்கு ஊடாக செல்லமுடியாது.
போர்க்காலத்தின்போது, விடுதலைப்புலிகளின் ஆளணிகள் தேவைக்கேற்ப வடக்கிலிருந்து கிழக்குக்கும் கிழக்கிலிருந்து வடக்குக்கும் நகர்த்தப்பட்டன. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் அக்காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு சென்றது கூட கட்டுநாயக்கா விமானதளமூடாக அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பாதுகாப்புடனே அவர் தமிழீழ எல்லைகளை கடந்து சென்றார். போர்க்காலத்தின்போது அனைத்து நாடுகளின் ஆயுத, தொழிநுட்ப, புலனாய்வு உதவிகளோடு தமிழ்ப்பிரதேசங்கள் முற்றுகையிடப்பட்டன. அப்போது அதனை முறியடிப்பதற்கான விடுதலைப்புலிகளின் வழங்கல்கள் அனைத்தும் கடலூடாகவே இருந்தது. அவ்வாறான வழங்கல் ஒன்றின்போது தாக்குதலுக்குள்ளான விடுதலைப்புலிகளின் கப்பலையே படத்தில் காண்கிறீர்கள். தமிழீழ கடலில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அப்போது இருந்தது.
கடற்புலிகளின் வழங்கல் கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளான நிலையில்
தற்போது அமுலில் உள்ளதாக கூறப்படும் போர்நிறுத்தம் மூலம் விடுதலைப்புலிகளின் கடல்வழி செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரச தலைவரே நாடு நாடாக சென்று இராணுவ ஒப்பந்தங்களை செய்து இராணுவத்தை பலப்படுத்தும் அதேவேளை, விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு கூட செல்லமுடியாதவாறும் தமது ஆயுத பலத்தை பெருக்கமுடியாதவாறும் போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் உள்ளன.
ஆனாலும் சமாதான பேச்சுவார்த்தைகளில் நெகிழ்வுபோக்கை காண்பித்து, தமது தளபதிகளை வன்னிக்கு அழைத்துவர - வழமையான சமாதானகால நடைமுறைப்படி - ஏற்பாடு செய்துதரும்படி அவர்களால் கேட்கப்பட்டடது. சமாதான தீர்வில் உண்மையான பற்றுறுதி சிங்கள அரசுக்கு இருந்திருந்தால் வழமையான நடைமுறைகளுக்கு ஏற்ப ஹெலிகொப்ரர் ஊடாக தளபதிகளின் போக்குவரத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும்.
கடற்புலிகளின் தாக்குதல் படகு ஒன்று
ஹெலிகொப்ரர் ஊடான போக்குவரத்தை நிராகரித்த அரசு கண்காணிப்புகுழுவின் பிரசன்னத்துடன் தமிழீழ கடலூடாக தளபதிகள் சென்றுவர இணங்கியது. அதற்குகூட இணங்கிய புலிகள் அவ்வாறு பயணிக்க ஆயத்தமாக இருந்தார்கள். இறுதிநேரத்தில் சிங்கள கடற்படைக்கலங்கள் மூலம், அவர்கள் செல்ல இருந்த கடற்கலத்தை முற்றுகையிட்டு, விரும்பத்தகாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். போர்க்காலத்தின்போது அப்பகுதியில் சிங்கள கடற்கலங்கள பயணிக்கவேண்டுமாக இருந்தால் தொடரணியாகவே( ஏறத்தாழ 10 இற்கும் மேற்பட்ட கலங்கள்) பயணிக்கவேண்டும். அதுவும் ஆழக்கடலூடாகவே அப்போக்குவரத்துக்கள் இடம்பெறும். அந்தளவுக்கு விடுதலைப்புலிகளின் கடல் ஆதிக்கம் இருந்தது.
இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளின் சுயகெளரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் – விடுதலைப்புலிகள் செல்லும் ஒரு கடற்கலத்தை முற்றுகையிட்டவாறு சிறைக்கைதிகளை போல தமது கடற்பரப்பில் செல்ல -விடுதலைப்புலிகளால் முடியாது. இதேநேரத்தில், 1987 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை மீட்டி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
தற்போது தனியார் ஹெலிகொப்ரர்களை வாடகைக்கு அமர்த்தி பயணஒழுங்குகளை ஏற்படுத்துமாறு சிங்கள அரசு கூறியிருக்கிறது. ஆனால் அவ்வாறான பயண ஒழுங்குக்கு கூட பல நிபந்தனைககள் சொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் தமது பயணகாலத்தை – அதாவது சென்று திரும்புவதற்கான காலம் – 72 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது போன்ற சினமூட்டக்கூடிய நிபந்தனைகளையும் உள்ளடக்கி உள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறு சின்ன சின்ன விடயங்களிலே கூட, ஒரு இணக்கமான முடிவுக்கு வருவதில் தடைகளை ஏற்படுத்தும் அரசு, வெளிஉலகில் தாங்கள் நெகிழ்வுபோக்குடன் செயற்படுவதாக காட்டிக்கொள்கிறது. அதில் அது வெற்றியும் அடைந்திருக்கலாம்.
ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளின் உள்ளுர் போக்குவரத்துக்களை முடக்கி, பிராந்திய தளபதிகளுடான நேரடி தொடர்புகளுக்கு தடையை ஏற்படுத்தி, இன்னொரு புறத்தில் துணைஆயுதப்படைகளின் உதவியுடன் இனப்படுகொலையை ஏவிவிடும் சிங்கள அரசுடன் பேசுவதில் என்ன இருக்கிறது?
படங்கள் விக்கிபீடியா, புதினம், Dailymirror.
|
|
|
|