|
வேலூர் புரட்சி
|
“எந்த யூலை மாதம் 10-ம் திகதி வேலூர் கோட்டையில் இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ, எப்போது 800 தமிழ் மறவர்கள் பிணமாக கிடந்தார்களோ அந்தநாள் இந்நாள். தமிழ் வீரர்கள் 200 –ற்கும் மேற்பட்ட வெள்ளையர்களை வேட்டையாடிய நாள் யூலை 10–ம் திகதி. இந்த சிப்பாய் புரட்சி முடிந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டது” இவ்வாறு வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற 200 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட தபால்தலையை வெளியிட்டு தமிழகமுதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.
நினைவுத் தபால்தலை வெளியிடும் நிகழ்வில் தமிழகமுதல்வர் அவரது மேலதிக உரையில்:
அன்றைக்கு நம் வீரர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்களுக்கு சிறந்த தலைமை இல்லாததுதான் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இந்த கருத்தை ஏற்க நான் தயாராக இல்லை. மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலும் வெள்ளையருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.
இருந்தும் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? இடையிலே துரோகிகளும் இருந்ததால்தான் தோற்றார்கள். கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். அவன் கட்டப்பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லையா?
இப்படி நம் மன்னர்கள் படைபலம் கொண்டவர்களாக இருந்தாலும் வெற்றி பெறாததற்கு காரணம் கூடவே உடன்பிறந்தே கொல்லும் வியாதி போல துரோகிகளால்தான் தோற்கநேரிட்டது. வெற்றிபெறமுடியாமல் போனது.
இந்தியாவின் முதல் விடுதலைப்போருக்கு வித்திட்டதே வேலூர் சிப்பாய் புரட்சி என்பதை வரலாறு ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரத்தில் தமிழனின் பங்கு என்ன என்பதை உணர்த்தவேண்டும். வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு திருப்புமுனையாக, முதல் போராட்டமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வேலூர் நினைவுச்சின்னம் இருக்கும். எனினும் மேலும் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும்.
அத்துடன் சிப்பாய் புரட்சியை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடபுத்தகங்களிலும் அவை உள்ளடக்கப்படும். அது மாணவர்களுடைய உள்ளத்தில் வீரத்தை ஊட்டுவதாக அமையும்.
மேற்கண்டவாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் கூறினார்.
தமிழக வரலாற்றின் போராட்ட கதாநாயகர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டம் என்பது தனியே அண்ணல் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை ரீதியான போராட்டங்களால் தான் வழிநாடாத்தப்பட்டதான கருத்துருவாக்கம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் நேற்றைய நிகழ்வானது அப்போராட்ட தியாகிகளுக்கு சிறியளவாவது கெளரவத்தை கொடுத்திருக்கும்.
மாவீரன் பூலித்தேவன் வாழ்ந்த இல்லம் வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெறுவதற்கு முன்னரும் கூட ஆங்கிலேயருக்கு எதிராக பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இந்திய சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக 1755 ஆம் ஆண்டில் வீரமுழக்கமிட்டவன் மாவீரன் பூலித்தேவன். 1755 ஆம் ஆண்டு கேணல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் அன்னியன் எவனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை கிடையாது என வீரமுழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றவன். அவரது நினைவாக திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெல்கட்டும் செவல் எனும் இடத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக பேணப்பட்டு வருகிறது.
மேலதிக தரவுகளுக்கான இணைப்புக்கள்:
1. தமிழ்நாடு இணையதளம்
2. விக்கிபீடியா
3. பிபிசி தமிழோசை ஒலித்தொகுப்பு
|
|
|
|
11 Comments:
தினகரனில் திரு.ப.திருமாவேலன் ஒரு கட்டுரை கொடுத்துள்ளார். அதுவும் நன்றாக உள்ளது.
நன்றி.
By
Sivabalan, at Tuesday, July 11, 2006 5:53:00 PM
நீங்கள் குறிப்பிட்ட தினகரன் கட்டுரையை கண்டுகொள்ளமுடியவில்லை. முடியுமாகஇருந்தால் அவ் இணைப்பை தெரியப்படுத்தி உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
தமிழ்வாணன்
By
thamillvaanan, at Tuesday, July 11, 2006 7:16:00 PM
இதோ சுட்டி இங்கே...
http://www.dinakaran.com/epaper/2006/JULY/05/default.asp
Dated July 5th 2006, Dinakaran.
நானும் அதை ஆக ஒரு பதிவிட்டுவிடுகிறேன்.
யாரேனும் தேடும் போது உதவியாக இருக்கும்.
மேலும் அக்கட்டுரையை படித்து விட்டு, முடிந்தால் தங்கள் கருத்துக்களை உங்கள் பதிவில் இன்னத்துவிடுங்கம் மிகவும் உபயோகமாக இருக்கும்.
By
Sivabalan, at Tuesday, July 11, 2006 7:23:00 PM
அதைப் பதிவாக கொடுத்துள்ளேன்.
அதன் சுட்டி இங்கே...
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_11.html
நன்றி.
By
Sivabalan, at Tuesday, July 11, 2006 7:45:00 PM
இந்த பதிவின் மூலம் பல விசயங்களை அறிந்து கொண்டேன். நன்றி.
By
Thekkikattan|தெகா, at Tuesday, July 11, 2006 8:15:00 PM
பதிவை இனைத்தமைக்கு நன்றி பல...
By
Sivabalan, at Tuesday, July 11, 2006 8:43:00 PM
ஏற்கனவே எனது பதிவின் இறுதியில் உங்கள் பதிவைபற்றி குறிப்பிட்டு அதற்கான இணைப்பும் வழங்கியிருக்கிறேன்.
எனினும் உங்கள் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றிகள்.
By
thamillvaanan, at Tuesday, July 11, 2006 9:19:00 PM
நல்ல பதிவு. தகவலுக்கு நன்றிகள்.
//இருந்தும் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? இடையிலே துரோகிகளும் இருந்ததால்தான் தோற்றார்கள். கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். அவன் கட்டப்பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லையா? //
எமது தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இது தான் முழுக்க முழுக்க காரணம் இல்லை என்பதே என் எண்ணம். போர் என்று வந்துவிட்டால் உளவுப்படை மிகவும் முக்கியமானது. வெள்ளையர்கள் எம் அரசர்கள் மாளிகையையும், எம் தமிழ்ப்படை பலத்தையும் உளவு பார்த்து தகவல் சேர்த்து அதற்கேற்ப தமது படையை வலுப்படுத்தியும், நகர்வுகளை மேற்கொண்டது போல் எம் முன்னோர்கள் செய்யவில்லை. அதுதான் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்பது என் எண்ணம்.
By
வெற்றி, at Tuesday, July 11, 2006 9:26:00 PM
இதுவே முதல் முறை உங்களின் பதிவிற்கு. இந்த பதிவில் பல வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன். இப்பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
By
Thekkikattan|தெகா, at Tuesday, July 11, 2006 9:59:00 PM
உங்கள் வருகைக்கும் கருத்துக்கள் வழங்கியதற்கும் நன்றிகள்.
இலங்கையில் கூட ஆரம்பத்தில் தமிழ் அரசர்கள் பற்றி பாடவிதானத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. வன்னி தமிழ் அரசன் பண்டாரவன்னியன் பற்றி சிறுவர் பாடபுத்தகத்தில் கூட இடம்பெற்றிருந்தது. பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் சூழ்ச்சியினால் மரத்தின் பின்னால் மறைந்திருந்து கொலை செய்வதாக படத்துடன் பாடப்புத்தகத்தில் இருந்தது இப்போதும் மனதில ஆழப்பதிந்திருக்கிறது.
பின்னர் அவ்வாறான தமிழ் அரசர்கள் வரலாறுகளை மறைத்து தற்போது தமிழ் வரலாற்று புத்தகங்களில் கூட சிங்கள அரசர்களின் வரலாறுகளை படிக்க வேண்டியிருக்கிறது.
அதனால்தான் தமிழகத்தில் கூட இவ்வாறு எமது வரலாற்றை பேணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது மனம் ஆறுதலடைகிறது.
உங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி.
அன்புடன்
தமிழ்வாணன்.
By
thamillvaanan, at Wednesday, July 12, 2006 8:51:00 AM
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
ஃஃஎமது தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இது தான் முழுக்க முழுக்க காரணம் இல்லை என்பதே என் எண்ணம். போர் என்று வந்துவிட்டால் உளவுப்படை மிகவும் முக்கியமானது.ஃஃ
நீங்கள் குறிப்பிடுவது போன்று தமிழர்களது உளவுப்படை அக்காலத்தில் பலமாக இருக்கவில்லை என சொல்லமுடியவில்லை. பழைய தமிழ் வரலாற்றுக்கதைகளை படிக்கும்போது அவர்களது இராஜதந்திரங்களும் உளவுநுட்பங்களும் போர் வியூகங்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. எனவே அவர்கள் இத்துறைகளில் பலமாக இருந்தார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.
என்னைப்பொறுத்தவரை அக்காலத்தில் அவர்கள் வளர்ந்துகொண்டிருந்த நவீன ஆயுதங்களை பற்றியோ அதனோடு ஒத்ததான போர்முறைகளை பற்றியோ அறிந்திருக்கவில்லை. இதனால் அவர்கள் வாள், ஈட்டி போன்றவற்றையே நம்பியிருக்க ஆக்கிரமிப்பாளர்களின் நவீன துப்பாக்கிகளால் அவர்கள் எதிர்கொள்ளப்பட்டபோது தோல்வியை தவிர வேறு தெரிவு இருக்கவில்லை.
அன்புடன்
தமிழ்வாணன்.
By
thamillvaanan, at Wednesday, July 12, 2006 9:01:00 AM
Post a Comment
<< Home