|
ஒரு தந்தையின் கதை
|
இது ஒரு தந்தையின் கதை. இலங்கைத்தீவில் எப்படியாவது இணைந்து வாழல் என்ற கோட்பாட்டில் ஊறிப்போன சில தந்தையர்களில் இவரும் ஒருவர். காசிப்பிள்ளை மனோகரன் - நான்கு மாதங்களுக்கு முன்னர், அப்பகுதியில், மிகவும் பிரபல்யமான மருத்துவர். கப்பல்களில் வேலைசெய்வோரும் கடற்படையினரும் கூட அவரிடம் சிகிச்சை பெற வருவார்கள். இப்போது அவர்கள் அவ்வாறு வரபோவதில்லை. மனோகரனுக்கு அதிகளவான சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் இனிமேல் அவர்கள் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ இவருடன் கதைக்கபோவதில்லை.
அவருடன் தொலைபேசி ஊடாகத்தான் தொடர்புகொள்ள முடிந்தபோதும் அவரது வேதனைகளை என்னால் உணரமுடிகிறது. தன்னால் இனிமேலும் திருகோணமலையில் வாழமுடியாது என்பதை சொல்கிறார். தற்போது இவருக்கு வருகின்ற அனேகமான தொலைபேசி அழைப்புகள் மிரட்டுகின்ற அல்லது எச்சரிக்கின்ற அழைப்புக்களாகவே இருக்கிறது.
மனோகரனின் மனைவி தேவகுஞ்சரம்பாள். அவரும் ஒரு வைத்தியர். அவராலும் இனிமேல் அந்த தொழிலை செய்யமுடியாது. மனோகரன் தழுதழுத்த குரலில் “ நான் எனது மகனை இழந்துவிட்டேன். எனக்கு இப்போது மிரட்டுகின்ற தொலைபேசி அழைப்புக்கள் தான் வந்துகொண்டிருக்கின்றது. எல்லோருக்கும் பயமாக இருக்கிறது. எனது மகளும் மூத்தமகனும் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொலைபேசியில் கவலைப்பட்டு அழுவார்கள். எங்களுடைய வாழ்க்கை ஏன் இப்படி?” என வேதனையுடன் கூறுகிறார்.
ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மனோகரனுடைய 21 வயதான மகன் ரஜிகருடன் இன்னும் நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சுடப்பட்டார்கள். சிறிலங்கா கடற்படையினர் தான் சுட்டதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக மகிந்த அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் “இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என கூறியது. ஆனால் இதுவரை அக்கொலையை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறிலங்கா காவ்லதுறையினரோ தங்களிடம் உரிய சாட்சியங்கள் இல்லை என கூறுகிறார்கள். அதனால் இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
சிறிலங்கா சிஐடியினர் தனியான இன்னொரு விசாரணையை செய்து கொண்டிருக்கிறார்கள். 13 விசேட அதிரடிப்படையினர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். அவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட 26 துப்பாக்கிகள் ஆயுதப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த ஐந்து மாணவர்களும் அந்த துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கவில்லை என அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்த ஐந்து மாணவர்களின் பெற்றோரிலும் மனோகரன் மட்டுமே துணிந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். தான் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக கடிதம் எழுதப்போவதாகவும் ஆனால் தற்போது தான் அதற்கான மனநிலையில் இல்லையெனவும் கூறுகிறார்.
“எனக்கு இந்த நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. எனது மகன் அவன் இறந்துவிட்டான். அவனை இனிமேல் நான் திரும்பபெற்றுக் கொள்ளபோவதில்லை. தற்போது தங்களுக்கு எனது மகனை சுட்டவர்களை தெரியாது என கூறுகிறார்கள். ஏன்?... நான் சுடப்பட்டநேரத்தில் அங்கேதான் இருந்தேன். நான் அந்த துப்பாக்கி சூட்டுவெளிச்சத்தை தெளிவாக பார்த்தேன். துப்பாக்கி சூட்டுச்சத்தத்தை தெளிவாக கேட்டேன். அப்போது அந்ந பிள்ளைகள் அப்படியே சரிந்து விழுந்தார்கள். படையினர் உடனடியாக அனைத்து இடங்களையும் சுற்றிவளைத்தார்கள. ……. ஆனால் தற்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார்கள்”.
 திருமலையில் கொல்லப்பட்டஐந்து மாணவர்கள் தற்போது அடிக்கடி அனாமதேய மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்துகொண்டிருக்கின்றன. மனோகரன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன அன்றிரவு முதலாவது மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் “நீ மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னால் உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்லுவோம்” என கூறப்பட்டது. அந்த அநாமதேய குரல் சிங்களத்திலும் தமிழிலும் கலந்து இருந்ததாக மனோகரன் சொல்கிறார்.
அதற்கு பின்னரும் அதிகமான மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. அதனால் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறையிட்டேன். அவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் முறையிடுமாறு சொன்னார்கள். நான் சிறிலங்கா காவல்துறையை நம்பமுடியாது. ஏனென்றால் அவர்கள்தான் அந்த பகுதியை சுற்றிவளைத்தார்கள். அதற்கு பின்னர் எனது மகன் சுடப்பட்டார். எப்படி என்னால் அதே அதிகாரிகளை நம்பமுடியும் என கேள்வி எழுப்புகிறார் அவர். அதனால் அவர் சார்பாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் முறைப்பாடு செய்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
ஜனவரி மாத இறுதியில், மோட்டார் சைக்கிள்களில் கொஞ்ச பேர் வந்து மீண்டும் மிரட்டிவிட்டு சென்றார்கள். இதன் பின்னர் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அவர்கள் வெளிப்படையாக இவ்விசாரணையில் நீதி கோரியும் மனோகரனின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் வேண்டுகோள் விடுத்தார்கள். மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள். மனித உரிமைக்குழுவில் ஏன் முறையிட்டாய் என கேட்டு மிரட்டினார்கள்.
பின்னர் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மனோகரனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது சரியான தமிழில் எழுதப்பட்டிருக்கவில்லை. “அது நிச்சயம் தமிழர் அல்லாதோரால் எழுதப்பட்ட கடிதம் என உறுதியாக கூறமுடியும். ஒவ்வொரு நாளும் மிரட்டல் … மிரட்டல். எப்படி எங்களால் இனிமேல் வாழமுடியும்? ”. அவரால் வேதனையை கட்டுப்படுத்தமுடியவில்லை.
நீங்கள் விடுதலைப்புலிகளுடனோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரோடோ ஏதாவது தொடர்பு வைத்திருந்தீர்களா? என கட்டுரையாளர் கேட்டார். “ நான் இந்த அரசியலை பற்றி கவனம் செலுத்துவதில்லை. நான் ஒருபோதும் புலிகளை நம்பியதில்லை. அவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படியாவது அமைதியான வாழ்க்கை வேண்டும். அதனால்தான் நான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி திருகோணமலையில் குடியேறினேன். இங்கு மூன்று இன மக்களும் வாழ்கிறார்கள். அல்லது நான் வன்னியில் வாழ்ந்திருக்கமுடியும்.”
“நான் பல சிங்கள நண்பர்களையும் முஸ்லீம் நண்பர்களையும் நாடு முழுவதும் கொண்டிருக்கிறேன். காமினி திசாநாயக்கா எனது தந்தையாருக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய தேர்தலுக்கு பல உதவிகளை எனது தந்தையார் செய்தார். மிகவும் பிரபல்யமான வர்த்தகர் பிஎன் டேவிட் சில்வா எனது நண்பர். சட்டத்தரணி டெஸ்மன் பெர்ணாண்டோ எனது நண்பர். முன்னாள் எஸ்பி தயா சமரவீரா எனக்கு மிகவும் பரிச்சயமானவுர். அவரை எப்போதும் எனது (சுடப்பட்டு இறந்துபோன) மகன் “தயா அங்கிள்” என்றுதான் அழைப்பான்”.
கடந்த தேர்தலில் எல்ரிரியினர் ஒருவரையும் தேர்தலில் பங்குபற்றவேண்டாம் என கூறினார்கள். ஆனால் நான் வாக்களிக்க சென்றேன். நான் மட்டுமல்ல எனது (இறந்து போன) மகனும் வாக்களித்திருந்தான்.
தற்போது மனோகரன் திருகோணமலையிலிருந்து வெளியேற விரும்புகிறார். ஆனால் தனது ஏனைய இரண்டு மகன்களுடைய அடையாள அட்டையிலும் யாழ்ப்பாண வதிவிட முகவரியை கொண்டுள்ளதால் கொழும்புக்கும் செல்ல தயங்குகிறார். ஏனென்றால் கொழும்பில் அவர்கள் இலகுவாக புலிகளாக முத்திரை குத்தப்படலாம்.
குறிப்பு: இப்பதிவு நமினி விஜயதாசவால் எழுதப்பட்ட ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். மனோகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்ட பாதையை ஆதரிக்காத போதும் தமிழர் என்ற ஒரே காரணத்தால் அவரது மகன் சுடப்பட்டிருக்கிறார். இப்போது அவரும் சிங்களவர்களால் தமிழ்ப்புலியாகவே பார்க்கப்படுகிறார். இச்சம்பவம் சொல்லும் செய்திகள் என்ன?
|
|
|
|
7 Comments:
நல்ல பதிவு. நன்றாக மொழிபெயர்த்துள்ளீர்கள்.
By
வெற்றி, at Saturday, July 15, 2006 10:45:00 AM
திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலிகள்.
பதிவுக்கு நன்றி.
By
Anonymous, at Saturday, July 15, 2006 2:31:00 PM
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அனானி,
கொழும்பில் கூட அவர்களது செயற்பாடுகள் நாகரிகமிக்க ஒரு சமுதாயத்தின் செயற்பாடுகளாக தெரியவில்லை. அதனால்தான் கடும்சுகவீனமுற்ற புலிகளின் ஊடகப்பேச்சாளருக்கு அப்பலோ மருத்துவமனையில் வைத்திய சிகிச்சை அளிக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
சந்திரிகா அம்மையார் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவசிகிச்சை வசதி செய்து கொடுக்க ஒரு தடவை மறுத்திருந்தார். ஆனால் அவரும் சர்வதேச கடலை தாண்டித்தான் பிரித்தானியா சென்றடைந்தார் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.
By
thamillvaanan, at Saturday, July 15, 2006 4:45:00 PM
By
theevu, at Sunday, July 16, 2006 1:44:00 AM
By
Chandravathanaa, at Sunday, July 16, 2006 5:17:00 AM
நான் அறியாதது.அறிய தந்தமைக்கு
நன்றி தமிழ்வாணன்.
By
Anonymous, at Sunday, July 16, 2006 9:19:00 AM
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
தமிழ்வாணன்
By
thamillvaanan, at Sunday, July 16, 2006 10:53:00 PM
Post a Comment
<< Home