|
தமிழீழதேசியப்பண்
|
எதிர்வரும் மாவீரர்தினத்திற்கு முன்னதாக தமிழீழதேசியப்பண்ணை உருவாக்கும் அரும்பெரும் முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ்மக்களுக்கும் விடுதலைப்புலிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேசியக்கொடியும், தேசிய மலரும் உத்தியோகபூர்வமாக பாவனையில் உள்ள நிலையில் தற்போது தேசியப்பண்ணை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வேண்டுகோள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு:
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.
அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.
தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.
எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.
இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் 27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com தொலைபேசி: +94 21 228 5010 தொலைநகல்: +94 21 228 3941
தகவல் உதவி புதினம்
|
|
|
இவரா அவர்!!
|
தமிழ் சிங்கள உறவுகள் படிப்படியாக சீர்குலைந்துகொண்டிருந்த காலப்பகுதி. 1954 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், வல்லிபுரம் பார்வதி அவர்களுக்கும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இளைய மகனாக பிரபாகரன் பிறந்தார். பிரபாகரனின் தாயார் ஆழமான கடவுள் பக்தியுடையவராகவும் தனது இளைய புதல்வனில் அளவு கடந்த பாசம் உடையவராகவும் இருந்தார். பிரபாகரனின் தந்தையார் தனது இரண்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளும் மிகவும் நல்ல பண்புகள் உள்ளவர்களாக வளரவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார்.
பிரபாகரனின் தந்தையார் நிலஅளவையாளராக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அடிக்கடி இடமாற்றங்கள் வந்துகொண்டிருக்கும். அதன்காரணமாக அவருக்கு இடமாற்றம் கிடைக்கும்போது "துரை" என அவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரபாகரனும் அவர் செல்லவேண்டிய இடமெல்லாம் செல்லவேண்டியிருந்தது. அவ்வாறு கிழக்கு மாகாணத்துக்கு அவரது தந்தையார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்காரணமாக, பிரபாகரனின் முதல் இரண்டாண்டு கல்வியை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கற்றார். பின்னர் மீண்டும் வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம் கிடைத்தபோது, வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் பிரபாகரன் தனது கல்வியை தொடர்ந்தார். பிரபாகரன் தனது ஏழாவது வருட கல்வியை அங்கு நிறைவு செய்தபோது, மீண்டும் அவரது தந்தைக்கு வவுனியாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. வவுனியாவுக்கு சென்று தனது கல்வியை தொடர்ந்தார். அடிக்கடி இடமாற்றங்களை பெற்று செல்லும்போதும், தனது இளையமகனை தன்னுடனே எப்போதும் கூட்டிச்செல்வார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் மேலதிக கல்வி கற்பிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரையும் அவர் ஒழுங்கு செய்துவிடுவார்.
சமயவைபவங்களின்போது பிரபாகரன் எப்போதும் சுறுசுறுப்பாக தனது குடும்பத்தினருக்கு உதவிசெய்து கொண்டிருப்பார். அயலவர்களும் உறவினர்களும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு பிரபாகரன் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். பிரபாகரன், பாட்டானாரின் நினைவு நாட்களின் போது ஆர்வத்துடன் அக்கறையுடனும் ஓடியாடி வேலை செய்துசெய்துகொண்டிருப்பார். அன்றையதினம் வருகைதரமுடியாத உறவினர்களுக்காக பிரபாகரன் உணவுகளை எடுத்துச்செல்வார் என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூருகிறார்.
வல்வெட்டித்துறையானது 10000 ஆயிரம் தமிழர்களை கொண்டதாகவும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தையும் மூன்று இந்து ஆலயங்களையும் கொண்டதாகவும் இருந்தது. அவற்றில் ஒரு இந்து ஆலயம் அவர்களது குடும்பத்தினரின் கோவிலாகும். அங்கு நடைபெறும் அனைத்து முக்கிய விழாக்களின்போதும் பிரபாகரன் பங்குபற்றி ஏதாவது உதவிசெய்து கொண்டிருப்பார். பிரபாகரனின் குடும்பத்தவரைப் போலவே பிரபாகரனும் மிகவும் ஆழமான கடவுள் பக்தியுடையவராக இருந்தார். பிரபாகரனின் விருப்பத்துக்குரிய கடவுளாக முருகன் இருந்தார். சிங்கள பேரினவாதக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தன.
பிரபாகரனின் தந்தையார் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தார். அவர் எப்போதும் கூர்மையடைந்துவரும் தமிழ், சிங்கள இன முரண்பாடுகளைப் பற்றி தனது நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருப்பார். இவ்விவாதங்கள் அனேகமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். பிரபாகரனால் அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியாவிட்டாலும், பிரபாகரன் எப்போதும் அவ்விவாதங்களின்போது அமைதியாக பிரசன்னமாக இருப்பார். இதன் மூலமாக தமிழ் சிங்கள அரசியல் முரண்பாடுகளை பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வாறான பிரபாகரனின் பண்பே தற்போதும் எவருடைய கருத்தையும் பொறுமையாக கேட்டறியும் குணவியல்புக்கு அடிப்படையாக இருக்கலாம்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியத் தலைவர்கள் மீது அனைத்து ஈழத்தமிழர்களும் மதிப்பும் பற்றும் வைத்திருந்தனர். இந்திய சுதந்திர தினங்களின்போது பத்திரிகைகள் அனைத்தும் ஆர்வத்துடன் இந்தியா பற்றியும் இந்தியத் தலைவர்களைப் பற்றியும் செய்திகளைத் தாங்கிவரும். மகாத்மா காந்தி, நேரு, சுவாமி விவேகானந்தா மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் பெரும்பாலான வீடுகளில் தொங்கிக்கொண்டிருக்கும். பிரபாகரன் இரண்டு இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டார். சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகத்சிங் ஆகியோரே அவர்கள். சுபாஸ் சந்திரபோசின் சுலோகமான " எனது இறுதி இரத்தத்துளி சிந்தப்படும்வரை நான் எனது மண்ணின் சுதந்திரத்துக்காகப் போராடுவேன்" என்ற வார்தைகள் பிரபாகரனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நெபபோலியனின் படையெடுப்புகளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளையும், மகாபாரதக் கதைகளையும், கிருபானந்தவாரியாரின் சமயச்சொற்பொழிவுகளையும் விரும்பி அறிந்துகொள்ளும் ஒருவராக பிரபாகரன் இருந்தார்.
இதுபற்றிய அரசியல் கூட்டங்கள் நடந்தபோது அவற்றுக்குச் சென்று அப்போதைய நிலைமைகளைப் பிரபாகரன் அறிந்து கொண்டார். அவரது வீட்டிலும் அவரது தந்தையாரும் உறவினர்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுரங்களை உறுதிப்படுத்துவது போலவே கதைத்தார்கள். ஒருநாள் பிரபாகரன் ஒரு செய்தி அறிந்தார். பாணந்துறையில் உள்ள இந்துக்குருக்கள் ஒருவர் சிங்களக் காடையரால் பிடிக்கப்பட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியே அதுவாகும். "நாங்கள் சமய நெறிப்படி வாழ்பவர்கள். சமய நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு உயர்நிலையில் வைத்து மதிக்கப்படவேண்டிய குருக்களையே உயிருடன் தீமூட்டி எரிக்கிறார்கள் என்றால், நாங்கள் ஏன் அவர்களை திருப்பித்தாக்கக்கூடாது?" என பிரபாகரன் கேட்டார்.
எம்.ஆர், நாராயணன் சுவாமி அவர்களால் எழுதப்பட்ட TIGERS OF LANKA என்ற நூலில் இடம் பெற்ற ஒரு சிறு பதிவே இதுவாகும்.
|
|
|
இலங்கை ஒரு வழிகாட்டி
|
இன்று இலங்கை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூல் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்வோர் அறிந்து கொள்ளக்கூடிய மிகவும் பயன் உள்ள நூல் அது ஒன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன். அப்புத்தகத்தை வாசித்த பின்னர் அவ்வாறான முழுமையான வழிகாட்டிநூல் ஏதாவது சிறிலங்கா அரசாங்கத்தினூடாகப் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறதா? என இணையப்பக்கங்கள் வழி பார்த்தபோது ஏமாற்றம் தான் காத்திருந்தது.
இப்புத்தகம் www.lonelyplanet.com எனப்படும் இணையத்தளத்துக்குரியவர்களால் அனைத்து நாடுகளுக்குமான வழிகாட்டி நூல்களின் வரிசையில் அமைந்ததாகும். தொடர்ச்சியாக மீள்பதிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இப்புத்தகத்தின் 2002 ஆம் ஆண்டுப் பதிப்பைத்தான் எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கான பதிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டதை இணையத்தளமூடாக அறியக்கூடியதாகவுள்ளது.இதற்கான எழுத்தாளர்கள் மூவரும் இலங்கைத்தீவின் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று இதனை தொகுத்துள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.
இனி புத்தகத்தின் உள்ளடக்கங்களைப் பார்ப்போம். என்ன நோக்கத்துக்காக இப்புத்தகம் வெளியிடப்படுகிறது என்பதை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் இலங்கையின் வரலாறு விபரிக்கப்படுகிறது. இலங்கையின் பண்டைய தமிழ், சிங்கள அரசர்கள் பற்றியும் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவம் பற்றியும் குறிப்பிட்டு விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களையும் அலசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களைபற்றிய குறிப்புகள் வருகின்றன. உதாரணத்துக்கு யாழ்ப்பாண நகரம் பற்றிய குறிப்புகளைக் குறிப்பிடவிரும்புகிறேன். ஒரு காலத்தில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததை இப்புத்தகம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.அதில் யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்குள்ள முக்கியமான ஆலயங்களையும் பிரதான நூல் நிலையத்தையும் அதற்கு நேர்ந்த அவலத்தையும் தொட்டுகாட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வரும் சிறுதலைப்புகள்: சந்தைகள், தங்ககங்கள்(அதன் விலைப்பட்டியலுடன்), உணவகங்கள், போக்குவரத்துமுறைகள் என நீண்டு செல்கிறது.
அடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியத்துவமான இடங்கள் எவையெனக் குறிப்பிட்டுள்ளார்கள். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என அழைக்கப்படும் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டதையும் பின்னர் அவர்கள் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவ்விடுதலைப்போராட்டத்தில் முதலில் கரும்புலியாகச் சாவடைந்த மில்லரின் கல்லறை நெல்லியடியில் அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வல்வெட்டித்துறை நகரை பற்றிக் குறிப்பிடும் போது அங்குள்ள அம்மன் கோவிலைப் பார்க்கும்போதே அந்நகரம் எவ்வாறு முன்னர் செழிப்பாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யமுடியும் என அவ்வெழுத்தாளர் கூறுகிறார். அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் வழிபடுகின்ற கோவில் என விளிக்கும் அவர்கள், அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள பிரபாகரின் வீட்டைப் பார்வையிட அங்கு நிற்பவர்களிடம் விசாரியுங்கள் எனக் கூறுகிறார்கள்.
தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா என நீண்டு செல்கிறது. அங்கு இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சோதனை முகாம்கள், விடுதலைப்புலிகளின் வரிவிதிப்பு நடைமுறைகள் அவர்கள் வெளிநாட்டு பயணிகளை அனுசரிக்கும் நடைமுறைகளையும் கூடக் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்து முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தமிழ், சிங்கள பயன்பாட்டுச் சொற்களும் குறியீடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக தமிழில் வெளியே - Exit - veliye உள்ளே - Enterance - ullay ஆண்கள் - Man - Aankal பெண்கள் - Woman - Penkal
இவ்வாறு 'காவல்துறையை அழை', 'வைத்தியசாலை எங்கே?' என்பன போன்ற அவசர, அவசிய சொல்லாடல்களையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கவேண்டியது.
சிறிலங்கா அரசாங்கத்தினூடாகவோ அல்லது அதனது பேரினவாத அமைப்புகளுடாகவோ வெளிவிடப்பட்ட எந்த வெளியீடுகளும் இலங்கைத்தீவின் அனைத்து இடங்களையும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்பதையும், இவ்வாறான கையேடுகள் கூட எமது மக்களைப் பற்றியும் அங்குள்ள சூழ்நிலைகள் பற்றியும் வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அவைபற்றிய விளக்கமான நூல்களை அறிஞர்கள் வெளிவிடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்..
|
|
|
அடுத்தது யார்?
|
இலங்கைத்தீவில் தொடரப்போகும் அடுத்த ஆறாண்டு நிகழ்ச்சித்திட்டத்தினை சிறிலங்கா அரசதரப்பில் தலைமை ஏற்கப்போவது யார்? சர்வதேச நாடுகளின் ஆதரவையும் இலங்கைத்தீவின் சிறுபான்மை சமூகங்களின் பெருமளவு ஆதரவையும் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது இலங்கைத்தீவின் பெரும்பான்மை சமூகத்தின் சாதாரண மற்றும் கடும்போக்கு மக்களின் ஆதரவை கொண்ட மகிந்த ராஜபக்சவா? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத்தீவில் அமைதி திரும்பப்போவதில்லை என எண்ணினாலும், ரணில் வந்தால் ஓரளவு சமாதானம் வரும்என்றே தமிழர்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
வெளிப்படையாக தன்னால் செய்யச்கூடியதையே சொல்லக்கூடிய தலைவர் ரணில்தான். எனவே அவர் சொல்வதில் நம்பிக்கை வைக்கமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தெரிவிக்கின்றன. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை. ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரணிலுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டு தலைவர்களையும் நம்பமுடியாது என்ற கட்டத்திலும் சமாதானத்துக்கான வாக்களிப்பாக, சிங்களதேசத்துக்கு கொடுக்கப்படும் இன்னுமொரு சந்தர்ப்பமாக அது கருதப்படும்.

ஆனால் சிங்கள தேசத்தின் கடும்போக்காளர்கள் என்ன செய்கிறார்கள்? இலங்கைத்தீவை சிங்கள பௌத்தநாடாக்க வேண்டும் என்றும் கொழும்பு நகரத்தில் மட்டும் 1000 புத்தர்சிலைகளை நிறுவவேண்டும் என்றும் தமிழர்களுடன் அதிகாரப்பங்கீடு கூடாது என்றும் கூறும் சிங்கள பௌத்த பிக்குகள் இவர்களையும் இன்று மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரகூட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.
|
|
|
|